அமீரக செய்திகள்

துபாய்: குறிப்பிட்ட இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை மட்டும் மீண்டும் தொடங்கிய RTA.. விபரங்களும் வெளியீடு..!!

துபாயில் வரலாறு காணாத மழை பெய்ததைத் தொடர்ந்து, சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொது போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் கடந்த இரு நாட்களாக துபாய் எமிரேட் முழுவதும் பேருந்து சேவைகளும் பெரிதும் முடங்கியது. மேலும் நிலைமையை சீராக்க ஊழியர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.

அதேபோன்று, துபாயிலிருந்து மற்ற எமிரேட்களுக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி பேருந்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நேற்று முன்தினம் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்திருந்து. இந்நிலையில், ஒரு சில சாலைகளின் நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதால் சில இடங்களுக்கு மீண்டும் இன்டர்சிட்டி பேருந்து சேவையை தொடங்குவதாக RTA அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை RTA தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், RTA பயணிகள் இப்போது பின்வரும் வழித்தடங்களில் எமிரேட்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் தற்போது சேவை தொடங்கியுள்ள இடங்களையும் RTA பட்டியலிட்டுள்ளது.

  • E201: அல் குபைபா பேருந்து நிலையம் முதல் அல் அய்ன் பேருந்து நிலையம் வரை
  • E700: யூனியன் பேருந்து நிலையம் முதல் ஃபுஜைரா பேருந்து நிலையம் வரை
  • E315: எதிசலாட் மெட்ரோ நிலையம் முதல் ஷார்ஜாவின் முவைலா பேருந்து நிலையம் வரை
  • E411: எதிசலாட் மெட்ரோ நிலையம் முதல் அஜ்மான் பேருந்து நிலையம் வரை

இருப்பினும், துபாய் மற்றும் அபுதாபி இடையே நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை என்பதால், துபாயிலிருந்து அபுதாபி சிட்டி பேருந்து நிலையத்திற்கும், முஸஃப்பா ஷாபியா பேருந்து நிலையத்திற்கும் இடையே இயக்கப்படும் E100 மற்றும் E101 பேருந்து சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

துபாயில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முழு அளவிலான முயற்சிகளை RTA அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், துபாயில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களின் குழுக்கள், அனைத்து சேவைகளையும் முழுமையாக மீட்டெடுப்பதற்கும் சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்கின்றனர்.

மேலும் RTA ஆனது, பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சப்ளையர்கள் உட்பட 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடனும், 400 பம்புகள், 300 தொட்டிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் புல்டோசர்களுடனும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!