அமீரக செய்திகள்

UAE வேலையின்மை காப்பீட்டுத் திட்டம்: அபராதங்களை செலுத்தாத வரை ‘புதிய ஒர்க் பெர்மிட்’ இல்லை.. விரைவில் முடியும் காலக்கெடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டாய வேலை இழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்னும் சில வாரங்களில் முடிய உள்ளது. முன்னதாக, தனியார் துறை, மத்திய அரசுத் துறைகள் மற்றும் இலவச மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் தன்னிச்சையான வேலைவாய்ப்பு இழப்பு (Involuntary Loss of Employment-ILOE) திட்டத்தில் குழு சேர வேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று MoHRE அறிவித்திருந்தது.

அதன் படி, ஏற்கனவே இத்திட்டத்தில் கிட்டத்தட்ட 5 மில்லியன் ஊழியர்கள் குழுசேர்ந்துள்ள நிலையில், இதுவரை பதிவு செய்யாமல் இருக்கும் ஊழியர்களையும் உடனடியாக பதிவு செய்யும்படி மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வலியுறுத்தியுள்ளது.

இந்த ILOE காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் மற்றும் தகுதி என்ன? சந்தா எப்படி செலுத்துவது? அபராதம் எவ்வளவு? போன்ற ஊழியர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய விவரங்களை இங்கே பார்க்கலாம்:

MoHREஇல் பதிவு செய்யப்படாத நிறுவனத்தின் ஊழியர்கள் பதிவு செய்ய முடியுமா?

ILOE இணையதளத்தில் வெளியிடப்பட்ட எச்சரிக்கையின்படி, MoHRE இல் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களின் சார்பாக குழுசேரலாம். அதற்கு நிறுவனங்கள் தங்கள் டிரேட் லைசென்ஸை ஒரு கோரிக்கை கடிதத்துடன் இணைத்து [email protected] க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தண்டனைகள்:

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அக்டோபர் 1ஆம் தேதிக்குள் ஒரு ஊழியர் திட்டத்திற்கு குழுசேரவில்லை என்றால், 400 திர்ஹம் அபராதம் செலுத்த நேரிடும்.

ஒரு ஊழியர் திட்டத்திற்குச் சந்தா செலுத்தியிருந்தாலும், உரிய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரீமியத்தைச் செலுத்தாமல் இருந்தால், காப்பீட்டுச் சான்றிதழ் ரத்து செய்யப்படுவதுடன் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

அபராதத்தை எவ்வாறு செலுத்துவது?

ஊழியர்கள் குறிப்பிட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு அபராதத்தை செலுத்தத் தவறினால், அந்தத் தொகை அவர்களின் ஊதியத்தில் இருந்து MoHRE மூலம் கழிக்கப்படும்.

அபராதத்தை செலுத்தாமல் இருந்தால் ஒருவரின் வேலை வாய்ப்பு பாதிக்குமா?

அமீரகத்தின் வேலைவாய்ப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து அபராதங்களும் செலுத்தப்படும் வரை ஊழியர் புதிய பணி அனுமதிக்கு தகுதி பெறமாட்டார். எனவே, இது உங்கள் வேலை வாய்ப்பை கட்டாயம் பாதிக்கும்.

திட்டத்தில் விலக்கு பெற்றவர்கள்:

ILOE காப்பீட்டுத் திட்டத்தில் பின்வரும் ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:

  • முதலீட்டாளர்கள் (அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்)
  • வீட்டு உதவியாளர்கள்
  • தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள்
  • 18 வயதுக்குட்பட்ட சிறார்கள்
  • ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் புதிய வேலையில் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள்

இத்திட்டத்தில் சந்தா செலுத்துவது எப்படி?

  • இலவச சேனல்கள்: ILOE இணையதளம் மற்றும் ஸ்மார்ட் ஆப்.
  • பிற சேனல்கள் : அல் அன்சாரி எக்ஸ்சேஞ், பிஸினஸ் சென்டர் தவ்ஜீஹ் மற்றும் தஷீல், எடிசலாட் (விரைவில்), கியோஸ்க் (upay மற்றும் MBMEPay), போடிம் ஆப் (விரைவில்)

திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

அமீரகத்தில் ஒரு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை அல்லது ராஜினாமா தவிர வேறு காரணங்களால் அவர்கள் வேலையை இழந்தால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை இழப்பீடு கிடைக்கும்.

இழப்பீடு பெறுவதற்கான நிபந்தனைகள்:

  • சரியான நேரத்தில் சந்தா செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • ஊழியர் வேலையிலிருந்து ராஜினாமா செய்திருக்கக்கூடாது.
  • ஒழுங்கு காரணங்களுக்காக பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கக் கூடாது.
  • பணிநீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இழப்பீடு கோரி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பணியாளரிடம் ஏற்கனவே தலைமறைவு (absconding) புகார் இருக்கக்கூடாது.

முதன்முதலாக இந்த மாதம் திட்டத்தில் சந்தா செலுத்தி, ஒரு சில வாரங்களுக்குப் பிறகு ஊழியர் வேலையை இழந்தால், அவருக்கு இழப்பீடு கிடைக்குமா?

வேலையிழப்பு இன்சூரன்ஸ் கொள்கையின் படி, சந்தா செலுத்திய உடனே ஊழியர் இழப்பீட்டுத் தொகையை பெற முடியாது. குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு திட்டத்தில் குழுசேர்ந்திருந்தால் மட்டுமே ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெற தகுதி பெறுவார்கள்.

உதாரணமாக, ஒருவர் ஜனவரியில் சந்தா செலுத்தியிருந்தால், டிசம்பர் 2023க்குப் பிறகு வேலை இழப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெறத் தகுதியுடையவராவார்.

ILOE திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்:

இந்த ILOE திட்டங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு ஊழியர் மூன்று மாதங்கள் வரை இத்திட்டத்தின் நன்மைகளைப் பெறலாம்.

வகை A: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம் அல்லது அதற்கும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்கள்

  • செலவு: மாதத்திற்கு VAT வரியுடன் 5 திர்ஹம்
  • இழப்பீட்டு நன்மை: அடிப்படை சம்பளத்தில் 60% என்ற அடிப்படையில் மாதம் 10,000 திர்ஹம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

வகை B: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம்களுக்கு மேல் ஈட்டும் ஊழியர்கள்

  • செலவு: மாதத்திற்கு VATயுடன் 10 திர்ஹம்
  • இழப்பீட்டு பலன்: அடிப்படை சம்பளத்தில் 60 என்ற கணக்கில் மாதம் 20,000 திர்ஹம் வரை இழப்பீடுப் பெறலாம்.

எந்த சூழ்நிலையில் இழப்பீட்டின் நன்மைகள் நிறுத்தப்படும்?

காப்பீட்டாளர் புதிய வேலையில் சேர்ந்து விட்டாலோ அல்லது நாட்டை விட்டு வெளியேறினாலோ நன்மைகள் நிறுத்தப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!