அமீரக செய்திகள்

600 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் துபாய் மெரினாவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் மிதக்கும் ஹோட்டல் மற்றும் வீடுகள்..!!

உலகளவில் பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன நகரம் துபாய். பல உயரமான கட்டிடங்களுக்கும் நவீன கட்டிடக்கலைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக துபாய் திகழ்கிறது. மேலும், அடுத்தடுத்து புதுப்புது பிரம்மாண்ட திட்டங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. தற்பொழுது புதியதாக துபாய் மெரினாவுக்கு அருகில் மிதக்கும் சொகுசு ஹோட்டலுடன் ஆறு மிதக்கும் சொகுசு வில்லாக்களை இணைத்தவாறு ஒரு பெரிய திட்டம் ஒன்று 600 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு வருகிறது.

சீ பேலஸ் (Sea Palace) என அழைக்கப்படும் மிதக்கும் ரிசார்ட் மற்றும் நகரக்கூடிய வில்லாக்களை கப்பல் கட்டும் நிறுவனமான சீகேட் ஷிப்யார்ட் (Seagate Shipyard) மற்றும் எல் பஹ்ராவி நிறுவனம் (El Bahrawy Group) இணைந்து உருவாக்கி வருகின்றன. இந்த சொகுசு வில்லாக்களானது அடிப்பகுதி முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல் பஹ்ராவி குழுமத்தைச் சேர்ந்த மொஹமட் எல் பஹ்ராவி கூறுகையில், “கண்ணாடி அடிப்பகுதி கொண்ட வீடுகளில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து வருகின்றன, ஏற்கனவே 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும், அதே நேரத்தில் முழு திட்டமும் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சொகுசு வில்லாக்களுக்கு நெப்டியூன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் வீடுகளில் ஒன்று முடிவடைந்து திங்களன்று துபாய் தொழிலதிபர் பால்விந்தர் சாஹ்னிக்கு 20 மில்லியன் திர்ஹமுக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிதக்கும் வீடானது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து செல்ல முடியும். இதற்காக கடல் அலைகளை தடுக்கும் திறன் கொண்ட ஹைட்ராலிக் அமைப்பு கொண்ட ஷாப்ட் மோட்டார்கள் (shaft motors) மூலம் அவை இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

வீடுகள் சர்வதேச பாதுகாப்பு தரங்களுடன் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவை சூரிய ஆற்றலை பயன்படுத்துவதாகவும் குப்பை மறுசுழற்சி முறையும் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், கழிவுநீரை சுத்திகரிக்கும் வசதி, காற்றினை சுத்திகரிக்கும் வசதி போன்ற பல்வேறு வசதிகளும் இந்த வீடுகளில் இருப்பதாக அதனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

நெப்டியூன் (Neptune) என்றழைக்கப்படும் வில்லாக்கள் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. ஒன்றில் பால்கனியும், மற்றொரு தளத்தில் வெளிப்புற நீச்சல் குளம் கொண்ட கூரையும் உள்ளது. ஒவ்வொரு தளமும் 300 சதுரமீட்டர் ஆகும். எனவே இது மொத்தம் 900 சதுர மீட்டரைக் கொண்டுள்ளது. மேலும், இதன் முதல் மாடியில் நான்கு படுக்கையறைகள் உள்ளன. கீழே, தரை தளத்தில் ஒரு சமையலறை, ஒரு ஹால், பணியாளர்களுக்கென இரண்டு கூடுதல் அறைகள் மற்றும் ஒரு பால்கனியைக் கொண்டுள்ளது. ஆடம்பர கார் பிராண்ட்டான ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) நிறுவனம் ஃபர்னிச்சர்களை வடிவமைத்துள்ளதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!