அமீரக செய்திகள்

துபாய்: கட்டிடத்தில் ஏற்பட்ட மாபெரும் தீவிபத்து… 14 நிமிடங்களிலேயே கட்டுக்குள் கொண்டுவந்த பாதுகாப்பு குழு..!!

துபாயின் அல் பர்ஷா 1ல் இருக்கும் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீவிபத்தை சிவில் பாதுகாப்பு குழுவினர் 14 நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று துபாய் சிவில் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தீவிபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், துபாய் குடிமைத் தற்காப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:24 மணிக்கு தீவிபத்து பற்றிய தகவல் கிடைத்ததாகவும் அல் பர்ஷா நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து அல் மார்சா, நாத் அல் ஷெபா மற்றும் ஜெபல் அலி ஆகிய பாதுகாப்புக்குழுவின் ஆதரவுடன் தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவிபத்து பற்றிய தகவல் கிடைத்த நான்கு நிமிடங்களிலேயே பிற்பகல் 1:28 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், கட்டிடத்தில் உள்ளவர்களை வெளியேற்றி 14 நிமிடங்களில் தீயை அணைத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்சமயம் கட்டிடத்தில் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கட்டிடத்தின் வெளிப்புற முகப்பில் சேதங்கள் பதிவாகியுள்ளன. அதேநேரத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!