அமீரக செய்திகள்

துபாயில் சாலையை மறுசீரமைக்க 689 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் புதிய திட்டம்..!! RTA தகவல்…!!

துபாயில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டப்பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் துபாயில் உள்ள ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் வாகனங்களின் போக்குவரத்து திறனை இரட்டிப்பாக அதிகரிக்கும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு சுமார் 689 மில்லியன் திர்ஹம் ஒப்பந்தத்தை வழங்கியிருப்பதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நேற்று (ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 01) அறிவித்துள்ளது.

தற்போதைய ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் இரண்டு திசைகளிலும் கூடுதலாக இரண்டு முதல் நான்கு பாதைகளை சேர்ப்பதன் மூலம், ஒரு மணி நேரத்திற்கு 8,000 வாகனங்கள் செல்லும் வகையில் சாலையை விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது. கூடவே, 13.5 கிலோமீட்டர் சைக்கிள் டிராக் அமைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் என்பது துபாயின் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளான ஷேக் சையத் சாலை, அல் கைல் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலை ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய சாலை ஆகும். இது துபாயில் உள்ள அல் பர்ஷா, JVC, அல் சுஃபுஹ் மற்றும் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி போன்ற சில பிரபலமான பகுதிகளையும் இணைக்கிறது.

இத்திட்டமானது ஷேக் சயீத் சாலையுடனான இன்டர்செக்‌ஷனில் இருந்து அல் கைல் சாலையுடனான இன்டர்செக்‌ஷன் வரை சுமார் 4.5 கி.மீ தொலைவிற்கு பரவியுள்ளது.

RTA வெளியிட்ட அறிவிப்பின்படி, ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டுடன் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக  ஷேக் சையத் சாலை, ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட், அல் அசயேல் ஸ்ட்ரீட் மற்றும் அல் கைல் சாலை ஆகிய நான்கு முக்கிய இன்டர்செக்‌ஷன்களும் மறுசீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTAவின் தொலைநோக்குப் பார்வை:

RTA இன் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மட்டர் அல் டேயர் அவர்கள் பேசுகையில், இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் சாலைகள் அனைத்தும் அல் சுஃபுஹ் 2, அல் பர்ஷா குடியிருப்புப் பகுதி மற்றும் ஜுமேரா வில்லேஜ் சர்கிள் போன்ற பல குடியிருப்பு மற்றும் மேம்பாட்டு சமூகங்களுக்கு சேவை செய்வதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களின் மக்கள் தொகை 640,000 நபர்களை எட்டும் என்று நம்புவதாகவும், இத்திட்டம் தொடர்பாக ஆணையத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், 13.5 கிமீ தொலைவிற்கு 4.5 மீட்டர் அகலத்தில் சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கான பாதை அமைக்கப்படும் என்றும், அதில் சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கு 2.5 மீட்டர் பாதையும், பாதசாரிகளுக்கு 2 மீட்டர் பாதையும் நியமிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அல் டேயரின் கூற்றுப்படி, புதிய சைக்கிள் ஓட்டும் பாதையில் இரண்டு பாலங்கள் இருக்கும். முதல் பாலம் ஷேக் சயீத் சாலையைக் கடக்கிறது, 5 மீட்டர் அகலத்தில் உள்ள இரண்டாவது பாலம் அல் கைல் சாலையைக் கடந்து செல்லும். இந்த இரண்டாவது பாதையில் சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கு 3 மீட்டர் அகலமும், மீதமுள்ள இரண்டு மீட்டர் பாதசாரிகளுக்கும் நியமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!