அமீரக செய்திகள்

துபாய்: மஹ்சூஸ் டிராவில் தமிழ்நாட்டை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 20 கோடி பரிசு..!! 900 திர்ஹம்ஸிற்கு கொத்தனாராய் வேலை செய்தவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்..!!

துபாயில் ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வரும் மஹ்சூஸ் வாராந்திர டிராவின் 57வது டிராவில் அதன் கிராண்ட் பரிசு தொகையான 10 மில்லியன் திர்ஹம்ஸை (இந்திய மதிப்பில் 20 கோடி) தமிழ் நாட்டை சேர்ந்த கூலி தொழிலாளி தினகர் என்பவர் தட்டி சென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்து பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கொத்தனார் வேலைக்காக வந்து தற்போது புஜைராவில் பணிபுரிந்து வரும் 25 வயதே நிரம்பிய தினகரனின் வாழ்க்கை, மஹ்சூஸ் டிராவில் அதுவும் முதல் முயற்சியிலேயே 10 மில்லியன் திர்ஹம்ஸை வென்றதன் மூலம் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் பலரின் கனவுகளை நிறைவேற்றிவரும் இந்த வாராந்திர மஹ்சூஸ் டிரா இந்த முறை தினகரனின் வாழ்க்கையில் ஒளியூட்டியுள்ளது. இந்த மஹ்சூஸ் டிராவில் முதல் பரிசை வென்றது குறித்து தினகரன் தெரிவிக்கையில், இந்த வெற்றி மறைந்த அவரது தாத்தா மற்றும் பாட்டியின் ஆசிர்வாதத்தால் கிடைத்ததாக நம்புவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து அவர் விவரிக்கையில், “என்னுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் நண்பர்கள் பல மாதங்களாக இந்த மஹ்சூஸ் டிராவில் பங்கேற்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த முறை நானும் பங்கேற்க வேண்டும் என்று எண்ணினேன். முதல் முறையாக பங்கேற்பதால் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், எனவே நான் எண்களைத் தோராயமாகத் தேர்ந்தெடுத்தேன். எனது மறைந்த தாத்தா, பாட்டியின் ஆசிர்வாதம் இந்த பணத்தை எனது குடும்பத்தை காப்பாற்ற உயிர்நாடியாக கொண்டு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் விவசாயம் செய்வதற்காக பிறரிடம் கடன் வாங்கி விளைநிலத்தை வாங்கினோம். ஆனால் விளைச்சலில் கிடைக்கும் வருவாயை விட எங்களுக்கு செலவு அதிகமாக இருந்தது. வாங்கிய கடனை செலுத்த நான் அமீரகம் வந்து மிகவும் கடினமாக உழைத்தேன், கடின உழைப்பினால் தற்போது அந்த கடனை 50,000 திர்ஹம்ஸ்களாக குறைத்துள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூலி தொழிலாளியாக வெறும் 900 திர்ஹம்ஸ் சம்பளத்தில் கொத்தனாராக பணிபுரிந்து தற்போது இந்த வெற்றியின் மூலம் பல கோடிகளுக்கு அதிபராகியுள்ள தினகர், இவ்வளவு சிறிய வயதில் இந்த அளவு பணத்தை வைத்திருப்பது மிகப்பெரிய பொறுப்பு என்றும், இதில் கிடைத்துள்ள பணத்தின் மூலம் தனது கிராமத்தில் பள்ளி வசதிகளை மேம்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், நான் ஒருபோதும் படிக்கும் நபராக இருந்ததில்லை, ஆனால் நல்ல கல்வி பலரின் வாழ்க்கைக்கான ஜன்னல்களைத் திறக்கும் என்பதை நான் அறிவேன். 12ம் வகுப்பை முடித்துவிட்டு தொழிற்கல்வி படிப்பை முடித்ததால்தான் என்னால் அமீரகத்திற்கு வர முடிந்தது என்றும் தனது கடந்தகால நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், நான் ஒரு டீனேஜராக கனவு கண்ட யமஹா RX100 பைக்கை இறுதியாக வாங்கக்கூடிய ஒரு மில்லியனர் என பெருமைப்பட கூறிய அவர் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மஹ்சூஸுக்கு எதனை நன்றி கூறினாலும் போதாது எனவும் தெரிவித்துள்ளார். சவுதியில் பணிபுரிந்து வரும் அவரது மூத்த சகோதரனையும் கூட்டாக தொழில் நடத்தவும் அவர்களின் நிலத்தை பயிரிடவும் வீட்டிற்கு திரும்புமாறும் தினகர் கூறியுள்ளார்.

வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட இந்த பெரிய மாற்றம் குறித்து கூறும் தினகர், நாம் எதை விதைப்போமோ அதுவே நமக்கு வந்து சேரும் என்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பேன் என தெரிவித்ததுடன், அவரின் விருப்பமான நடிகரான விஜய் திருமலை படத்தில் கூறிய “வாழ்க்கை ஒரு வட்டம் – வெற்றியாளர்கள் தோற்றவர்களாகவும் தோற்றவர்கள் வெற்றியாளர்களாகவும் மாறலாம்” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நான் இன்று ஒரு வெற்றியாளராக இருக்கிறேன், ஏனென்றால் நான் கடந்த காலத்தில் மக்களிடம் அன்பாக இருந்தேன், நான் தொடர்ந்து அன்பாக இருப்பேன், இந்த பணம் என் பணிவை மாற்றாது என்றும் தினகர் தெரிவித்துள்ளார்.

தினகர் வாழ்க்கையில் இத்தனை பெரிய மாற்றத்தை கொண்டு வந்த அந்த அதிர்ஷ்ட எண்கள் 1, 33, 40, 45 மற்றும் 46 என்பது குறிப்பிடத்தக்கது. மஹ்சூஸ் டிராவில் பங்கேற்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கும் ஐந்து எண்களும், டிரா முடிவில் வரும் ஐந்து எண்களும் ஒரு சேர பொருந்தினால் அந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த மிகப்பெரிய பரிசுத்தொகை முதல் பரிசாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!