அமீரக செய்திகள்

கனமழை எதிரொலி.. இடையில் நிறுத்தப்பட்ட துபாய் மெட்ரோ.. முடங்கிய ஷேக் சையத் சாலை.. இரவில் திண்டாடிய குடியிருப்பாளர்கள்..!!

துபாயில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் பெய்த கனமழை காரணமாக, எமிரேட்டின் மிகவும் பரபரப்பான ஷேக் சையத் சாலையில் போக்குவரத்து மாலையிலிருந்து இரவு வரை பல மணி நேரங்களாக முடங்கியுள்ளது. இதனால் ஷேக சையத் சாலையில் பயணித்த குடியிருப்பாளர்கள் அனைவரும் கடும் விரக்தியடைந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட இந்த அசாதாரணமான சூழல் காரணமாக, 5 மணி நேரத்திற்கும் மேல் தங்களின் வாகனங்களிலும், சாலையிலும் காத்திருந்ததாகவும், இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் தங்களின் மனக்குமுறலை சமூக ஊடக பக்கங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் ஒருவர் பகிர்ந்த வீடியோவின்படி, அவர் மாலை 3.30 மணியளவில் ஷேக் சையத் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகவும், இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சாலையில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மற்றொரு குடியிருப்பாளர் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ஷார்ஜாவை நோக்கி செல்லும் ஷேக் சையத் சாலையில், எக்ஸிட் 39 க்கு அருகில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாகவும், தயவுசெய்து சாலையைத் திறக்க உதவுங்கள் என்றும் RTA விடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், சாலையில் பல மணி நேரம் காத்திருந்து விரக்தியடைந்த சில குடியிருப்பாளர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு நடந்து சென்றதாக ஷேக் சையத் சாலைக்கு அருகே வசிக்கக்கூடிய துபாய் குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, கனமழை காரணமாக அதிகளவிலான பயணிகளை தினந்தோரும் கையாளும் துபாய் மெட்ரோவின் சேவையும் இடையில் நிறுத்தப்பட்டதால், மெட்ரோ பயணிகளும் நேற்றிரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ நிலையங்களில் செய்வதறியாது காத்துக் கிடந்துள்ளனர்.

குறிப்பாக, சென்டர்பாயிண்ட் நோக்கி செல்லும் துபாய் மெட்ரோவின் சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில், போதிய வசதிகள் இல்லாமல் பல மணி நேரம் சிக்கித் தவித்ததாக மெட்ரோ பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த மெட்ரோ பயணி ஒருவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மெட்ரோ சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பதில் எந்த தெளிவும் இல்லை. மெட்ரோ நிலையங்களில் உள்ள ஜூம் கடைகள் மூடப்பட்டு, கழிப்பறைகளும் அடைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயணிகள் எஸ்கலேட்டர்கள், படிக்கட்டுகள் மற்றும் தளங்களில் அமர்ந்திருப்பதைக் காட்டும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மற்றொரு பயணி கூறுகையில், எதிர் திசையில் உள்ள கடைசி நிலையமான எக்ஸ்போ சிட்டியை நோக்கி மட்டுமே மெட்ரோ இயக்கப்படுவதாகவும், விரக்தியடைந்த பல பயணிகள் இரவில் ஹோட்டல் தங்குமிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், துபாய் மாலில் மாலை 6 மணிக்கு மெட்ரோ சேவைகள் திடீரென தடைபட்டு, இரவு 9.15 மணி வரை மீண்டும் தொடங்கப்படாததால் நூற்றுக்கணக்கானோர் அங்கே சிக்கித் தவிக்கும் காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பயணிகள் பகிர்ந்துள்ளனர்.

துபாய் மட்டுமல்லாமல் அமீரகம் முழுவதும் நிலவிய நிலையற்ற மோசமான வானிலை காரணமாக, அமீரகத்தில் நேற்று பெய்த கனமழையால் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக ஸதம்பித்துள்ளது. மேலும், கனமழை காரணமாக துபாய் ஏர்போர்ட் வரும் அனைத்து விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது. அத்துடன் ஃபிளைதுபாய் விமான நிறுவனம் தங்களின் அனைத்தை விமான சேவைகளையும் ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதி தீவிர கனமழையால் ஸ்தம்பித்துப்போன துபாய்.. நாளையும் மழை தொடரும் என்பதால் கலக்கத்தில் குடியிருப்பாளர்கள்..!!

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!