வளைகுடா செய்திகள்

ஃபேமிலி விசா ஸ்பான்சர் செய்வதற்கான சம்பள வரம்பை உயர்த்தும் குவைத்.. வெளிநாட்டவர்கள் அதிர்ச்சி..!!

வெளிநாட்டவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரெசிடென்ஸ் விசா ஸ்பான்சர் செய்யும் நடைமுறைக்காக விதிக்கப்பட்டிருந்த சம்பள உச்சவரம்பை, குவைத் அரசு உயர்த்த உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து குவைத் நாட்டின் அல் அன்பா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், குவைத்தில் பணிபுரிபவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விசா ஸ்பான்சர் செய்ய, தற்போது நடைமுறையில் இருக்கும் சம்பள உச்ச வரம்பான KD500 லிருந்து KD800 ஆக உயர்த்த இருப்பதாகவும், அதற்கான முடிவை குவைத்தின் உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது.

சம்பள உச்ச வரம்பை உயர்த்துவதற்கான குவைத் உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவானது, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் படி, வெளிநாட்டவர் ஒரு குடும்ப விசாவைப் பெற, KD800 சம்பளம் பெறுவதை நிரூபிக்கும் விதமாக, அசல் பணி அனுமதி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வேறு ஏதேனும் கூடுதல் வருமானம் பெறுவதற்கான ஆவணங்கள் அல்லது சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குவைத் உள்துறை அமைச்சகத்தின் இந்த புதிய விதி, குவைத்தில் மக்கள்தொகை கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அதிக வருமானம் உள்ள வெளிநாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்கும் மற்றும் இதனால் அவர்களின் குடும்பத்திற்கு திருப்திகரமான வாழ்க்கைத் தரத்தை அவர்களால் வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போன்று குவைத் நாட்டிற்குள் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வெளிநாட்டவர்களின் மனைவிகள் குடும்ப விசாவி்ல் வந்து நாட்டில் வேலை தேடுவதை இது தடுக்கும் என்றும் உள்துறை அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!