அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாத சிறப்பு நள்ளிரவு தொழுகைக்கு தயார் நிலையில் அபுதாபி கிராண்ட் மசூதி.. விபரங்களை வெளியிட்ட நிர்வாகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றிரவு முதல் தொடங்கும் புனித ரமலான் மாத சிறப்பு நள்ளிரவு தொழுகைக்கு, அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதி (Sheikh Zayed Grand Mosque) தயார் நிலையில் இருப்பதாக கிராண்ட் மசூதியின் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் ரமலான் மாதத்தின் முதல் பாதியில் மசூதிக்கு வந்த வழிபாட்டாளர்கள் மற்றும் பார்வையிட வந்த சுற்றுலாவாசிகளின் விபரங்களையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரமலான் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் சுமார் 570,113 பார்வையாளர்களை அபுதாபி கிராண்ட மசூதி வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 164,704 பேர் ரமலான் மாத பிரார்த்தனையில் கலந்து கொண்டதாகவும், 210,431 நபர்கள் மசூதியில் நடைபெறும் இப்தார் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பிரார்த்தனைகளில் கலந்து கொண்டவர்களில் 102,419 பேர் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளை முதல் பாதியில் மேற்கொண்டுள்ளனர் என்றும், 194,978 பேர் மசூதியைப் பார்வையிட வந்த விருந்தினர்கள் என்றும் கிராண்ட் மசூதி நிர்வகாம் வெளியிட்ட புள்ளி விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேபோல், அல் அய்னில் உள்ள ஷேக் கலீஃபா கிராண்ட் மசூதி (Sheikh Khalifa Grand Mosque) மற்றும் ஃபுஜைராவில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதி (Sheikh Zayed Grand Mosque) ஆகிய பள்ளிவாசல்களுக்கு முறையே 77,233 மற்றும் 50,456 வழிப்பாட்டாளர்கள் ரமலான் மாதத்தில் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அபுதாபியின் ஷேக் சையத் கிராண்ட் மசூதி மையம் புனித மாதத்தின் கடைசி 10 நாட்களில், இரவு 12 மணிக்கு நடைபெறும் தஹஜ்ஜுத் இரவு தொழுகை (Tahajjud night prayer) எனும் சிறப்பு நள்ளிரவு தொழுகைக்கு வரும் வழிபாட்டாளர்களுக்கு இடமளிப்பதற்கும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பல்வேறு இடங்களுக்கு அவர்களை வழிநடத்துவதற்கும் தகவல் நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கிராண்ட் மசூதியில் தயார்நிலையில் உள்ள ஏற்பாடுகள்:

புனித மாதத்தின் இறுதி 10 நாட்களுக்காக, மசூதியின் முற்றம் 1,500 கம்பளங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் இடங்களிலிருந்து பிரார்த்தனைக் கூடங்களுக்கு செல்வதற்கு வசதியாக, முதியவர்கள் மற்றும் சிறப்புத் தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 70 மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கூடுதலாக, மசூதியில் வழிபாட்டாளர்களின் வசதிக்காக 50 சக்கர நாற்காலிகளும், 3,515 இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, அபுதாபி சிவில் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து, ஆம்புலன்ஸ்கள் மசூதியின் பார்க்கிங் பகுதிகளில் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிவில் பாதுகாப்பு குழு இந்த 10 நாட்கள் முழுவதும் மசூதியில் நிறுத்தப்படும் என்றும் கிராண்ட் மசூதி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் வழிபாட்டாளர்கள் அணுகுவதற்கு வசதி செய்யும் வகையில், கூடுதலாக 8,379 பார்க்கிங் இடங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் மசூதிக்கு வசதியான அணுகலையும் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக, 1,500 இடங்கள் வடக்கு பகுதியில் பிரார்த்தனை கூடத்திற்கு அருகில் பெண்களுக்காகவும், அதே நேரத்தில் 60 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஆண்டு கிராண்ட் மசூதி தெருவில் நுழைவாயில் எண் 7 க்கு (Gate No 7) எதிரே 1,800 பார்க்கிங் இடங்கள் மற்றும் அதே போல் சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி, எர்த் ஹோட்டல் மற்றும் ஒயாசிஸ் ஆஃப் டிக்னிட்டிக்கு அருகில் உள்ள மற்ற இடங்களிலும் பார்க்கிங் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடைசி பத்து நாட்களில் தஹஜ்ஜுத் இரவு தொழுகைகளில் கலந்துகொள்ளும் வழிபாட்டாளர்களை ஆதரிக்கும் வகையில், இந்த இடங்களிலிருந்து மசூதிக்கு ஒரு ஷட்டில் பேருந்து சேவையும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

ரமலான் முழுவதும் வழங்கப்படும் இஃப்தார் உணவு:

எல்லாவற்றிற்கும் மேலாக, ஷேக் சையத் கிராண்ட் மசூதி மையம், எர்த் ஹோட்டலுடன் (Erth Hotel) இணைந்து, மசூதி மற்றும் தொழிலாளர் நகரங்களில் புனித ரமலான் மாதத்தில் தினமும் இப்தார் உணவுகளை விநியோகிப்பதன் மூலம் மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பாரம்பரியத்தை மதிக்கும் “Our Fasting Guests” முயற்சியை அபுதாபியில் செயல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், புனித மாதத்தின் முதல் பாதியில் மட்டும் சுமார் 960,431 இஃப்தார் உணவுகள் நோன்பாளிகளுக்கு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 210,431 உணவுகள் கிராண்ட் மசூதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இஃப்தார் மையத்திலும், அதேவேளை சுமார் 750,000 உணவுகள் தொழிலாளர்களின் நகரங்களில் நேரடியாகவும் டெலிவரி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!