அமீரக செய்திகள்

பெண்கள் நள்ளிரவில் கூட எவ்வித பயமும் இன்றி நடந்து செல்லக்கூடிய நாடு அமீரகம்..!! துபாய் மன்னர் பெருமிதம்..!!

பாதுகாப்பான நாடு மற்றும் நகரங்களின் பட்டியலில் உலகளவில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் அமீரகம் தற்பொழுது மக்கள் வசித்து வரும் நாடுகளின் பாதுகாப்பு குறித்த மற்றுமொரு கணக்கெடுப்பில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Gallup இன் 2021 உலகளாவிய சட்டம் மற்றும் ஒழுங்கு அறிக்கையின்படி, அமீரகத்தில் வசிப்பவர்களில் சுமார் 95 சதவீதம் பேர் நள்ளிரவில் தனியாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்த குறிப்பிட்ட பிரிவில் அமீரகத்திற்கு அடுத்தபடியாக நார்வே 93 சதவீதம் சீனா மற்றும் ஸ்லோவேனியா 91 சதவீதம் பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பெண்கள் நள்ளிரவில் எவ்வித அச்சமின்றி நடமாடக்கூடிய நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமீரகத்தில் வசிப்பவர்கள் இரவில் பாதுகாப்பாக தனியாக நடக்கலாம். பாதுகாப்பு என்பது ஒரு ஆசீர்வாதம் மற்றும் பாதுகாப்பு என்பது அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை. ஒரு பெண் தனியாக, பகலிலோ அல்லது இரவு நேரத்திலோ பயமின்றி நடக்க முடியும் என்று சொன்னால், அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

அத்துடன் “அல்லாஹ் இந்த நாட்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் தொடர்ந்து இருக்க அருள்புரியட்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Gallup அறிக்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த கணக்கெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகம் உலகளவில் 93 சதவிகிதம் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பிரிவில் நார்வே 94 சதவிகிதம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் சிறந்து விளங்குவதாக வேறு பல அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு அட்டவணையின்படி, மற்ற எந்த நாட்டையும் விட ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 98.5 சதவீத பெண்கள், இரவில் தனியாக நடப்பது பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர்.

ஜூலை மாதத்தில், உலகின் 134 நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது பாதுகாப்பான நாடாக வரிசைப்படுத்தப்பட்டது என்று குளோபல் ஃபைனான்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

அதே போன்று ஜூலை மாதத்தில், எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் (EIU) பாதுகாப்பான நகரங்கள் இன்டெக்ஸ் 2021 இன் படி, 2021 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் அபுதாபி மற்றும் துபாய் ஆகியவை பாதுகாப்பான நகரங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!