அமீரக செய்திகள்

கனமழையால் அமீரகம் தத்தளித்ததன் எதிரொலி.. நாட்டின் உள்கட்டமைப்பை ஆராய அமீரக அதிபர் உத்தரவு..!!

அமீரகத்தில் இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இயற்கைப் பேரிடரின் மோசமான தாக்கத்தால் நாட்டில் உள்ள அனைத்து எமிரேட்களும் பாதிக்கப்பட்டன. குடியிருப்பாளர்களும் மழைவெள்ளத்தால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி தத்தளித்தனர்.

குறிப்பாக துபாயில் இன்னும் சில இடங்களில் மழைநீர் வடியாமல் தெருக்களிலும், சாலைகளிலும் தேங்கியிருப்பதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் வேலைக்குச் செல்ல வேண்டிய ஊழியர்களும் அலுவலகம் செல்ல முடியாமல் கடந்த மூன்று நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அந்த அளவிற்கு நாட்டில் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பு கடுமையாக உள்ளது.

இந்நிலையில், நாட்டில் பெய்த கனமழை குறித்து அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் தனது X தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பே நாட்டின் முதன்மையான முன்னுரிமை என்று கூறிய அமீரக அதிபர், நாட்டின் உள்கட்டமைப்பை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஓரு அசாதாரண சூழலில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை திறம்பட கையாளவும், மழைநீர் தேக்கத்தை சரிசெய்யவும் நாட்டின் உள்கட்டமைப்பை ஆராய்ந்து தேவையான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் நிலவிய நிலையற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான நிவாரண உதவிகளை வழங்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறும் அமீரக அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புக் குழுக்களின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், அமீரக அதிபரின் கவனிப்பு மற்றும் தலைமையின் கீழ் நாடு நல்ல ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “இத்தகைய நெருக்கடிகள் நாடுகள் மற்றும் சமூகங்களின் வலிமையை வெளிப்படுத்துகின்றன. மேலும் நாம் அனுபவித்த இயற்கையான காலநிலை நெருக்கடியானது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து மிகுந்த அக்கறை, விழிப்புணர்வு, ஒற்றுமை மற்றும் அன்பைக் காட்டியது. கடவுள் UAE மற்றும் அதன் சமூகத்தை பாதுகாத்து அதன் பெருமை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தட்டும்” என்று பிரார்த்தனை செய்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!