அமீரக சட்டங்கள்

UAE: ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.. மீறும் நிறுவனங்கள் பிளாக் செய்யப்படும்.. அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS – Wage Protection System) மூலம் தங்கள் சம்பளத்தை தாமதமின்றி பெறுவதற்கான தீர்மானத்தை மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு ஊழியருக்கும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு எதிரான அமைச்சரவை தீர்மானமானது அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்றத்துறை அமைச்சரான டாக்டர் அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மானன் அல் அவார் அவர்களால் சென்ற வாரம் வெளியிடப்பட்டது.

ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS):

இது ஒரு சம்பள பரிமாற்ற அமைப்பு ஆகும், இது வங்கிகள், எக்ஸ்சேஞ், அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க நிறுவனங்களை அனுமதிக்கும்.

WPS இல் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள்:

தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் தனியார் துறை முதலாளிகளால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல முக்கியமான நிபந்தனைகளை குறிப்பிடுகிறது:

  • அனைத்து ஊழியர்களின் சம்பளமும் WPS மூலம் உரிய தேதியில் செலுத்தப்பட வேண்டும்
  • மாதத்தின் 15வது நாளுக்குள் சம்பளம் மாற்றப்படாவிட்டால், அடுத்த மாதத்தின் 17வது நாளிலிருந்து நிறுவனம் WPS அமைப்பிலிருந்து தடுக்கப்படலாம்.
  • WPS மூலம் புதிய ஊழியர்களின் சம்பளத்தை மாற்றுவதற்கு முதலாளிகளுக்கு 30 நாள் அவகாசம் இருக்கும்.

ஊழியர்களுக்கு எந்த வகையில் பலனளிக்கும்?

புதிதாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அமீரக ஊழியர்களுக்கான சம்பளப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தக் கூடியது. இது ஊழியர்களுக்கு தாமதமின்றி சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி, ஊழியர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படுவதையும், ஒவ்வொரு மாதமும் ஊதியம் சரியாக கிரெடிட் செய்யப்படுவதையும் உறுதி செய்வதில் WPS அமைப்பு அமீரகத்தில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

WPS நிறுவப்பட்டதன் காரணம்:

அமீரகத்தில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதற்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதையும், தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதையும் உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பு WPS ஆகும். இந்த அமைப்பை மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சக மற்றும் அமீரக மத்திய வங்கி ஒருங்கிணைந்து 2009 இல் நிறுவியுள்ளது.

WPS எவ்வாறு செயல்படுகிறது?

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியரின் தொழிலாளர் கோப்பு எண் (labour file number) MOHRE இல் உள்ள பணி ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மத்திய வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்த வேண்டும்.
  • இதன் மூலம், ஊழியர்களுக்கு சரியான தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய, ஊழியரின் பணி ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பளத் தொகையை WPS ஒப்பிட்டுப் பார்க்கும். அப்போது MOHRE வேலை ஒப்பந்தத்தில் பதிவுசெய்யப்பட்ட சம்பள அளவை விட தொகை குறைவாக இருந்தால், MOHRE நெட்வொர்க்கில் இருந்து அந்த நிறுவனம் பிளாக் செய்யப்படும்.

பிளாக் செய்யப்பட்ட நிறுவனம் என்ன செய்ய வேண்டும்?

பிளாக் செய்யப்பட்ட நிறுவனம் பணம் செலுத்தும் சிக்கலை தீர்க்க வேண்டும். பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், இதன் விளைவாக சம்பளம் சரியாக வழங்கப்படாவிட்டால் நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஆகவே, இது போன்ற சவால்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஊழியர்களின் சம்பளத்தை சரியாக வழங்கிவிடுவது சிறந்தது.

Related Articles

Back to top button
error: Content is protected !!