அமீரக செய்திகள்

UAE: ஒரு நாளுக்கும் மேலாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் குடியிருப்பாளர்கள்..!!

ஷார்ஜாவில் இருக்கக்கூடிய மூன்று சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கும் மேலாக தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் விநியோகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினுமர ஒரு சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது பற்றி அல் நஹ்தாவில் வசிக்கும் ஒருவர், நவம்பர் 24, வியாழன் முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக குழாயில் இருந்து தண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலும் தண்ணீர் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

இப்பகுதி மட்டுமல்லாமல் அபு ஷாகரா மற்றும் ரோல்லா பகுதிகளிலும் தண்ணீர் விநியோகம் தடைபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அல் நஹ்தாவில் உள்ளவர்களில் சிலர் வேறு வழியில்லாமல் தண்ணீருக்காக மளிகைக் கடைகளில் குடிநீரை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டானது நண்பகலில் சுமார் நூறு கேலன் தண்ணீரை விற்றதாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு கடையில் இருந்த கேன்கள் மொத்தமும் விற்று தீர்ந்துவிட்டதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் மழை பெய்யும் போது இந்த தண்ணீர் விநியோக பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு சில ஷார்ஜாவாசிகள், தங்கள் கட்டிடத்தின் அறிவிப்புப் பலகைகளில் போடப்பட்ட ஒரு சுற்றறிக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த அறிவிப்பில் “அவசர நிலை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது: “அன்புள்ள குத்தகைதாரர்களே, மழையின் காரணமாக நேற்று முதல் முனிசிபாலிட்டியால் அல் நஹ்தா பகுதி முழுவதும் தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே, அவசர தேவைகளுக்கு 991 என்ற எண்ணுக்கு அழைக்கவும்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், ஷார்ஜா உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!