அமீரக செய்திகள்

“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்”.. துருக்கி-சிரிய மக்களுக்காக பிரதமர் கைப்பட எழுதிய கடிதம்.. குடும்பத்தோடு வந்து நிவாரணம் அனுப்புவதில் உதவி.. மெய் சிலிர்ந்த தன்னார்வலர்கள்..!!

துருக்கி – சிரியா எல்லையில் உருவெடுத்த திடீர் நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான பேர் பலியான நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும்.

இந்நிலையில், நிலநடுக்கத்தினால் நாசமடைந்த துருக்கி மற்றும் சிரியாவிற்கான நிவாரணப் பொருட்களை துபாய் உலக வர்த்தக மையத்தில்  தன்னார்வலர்கள் பேக்கிங் செய்து கொண்டிருந்தபோது, ​​சில முக்கிய நபர்களின் வருகையால் பெரிதும் உற்சாகம் அடைந்திருக்கின்றனர். திங்களன்று (மார்ச்.13) ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் மற்றும் ஷேக் மக்தூம் ஆகியோருடனும் அவரது இளம் அரச குடும்பமான பேரக்குழந்தைகளுடனும் இங்கு திடீரென வருகை தந்துள்ளார்.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15,000 உதவிப் பெட்டிகளில் நிவாரணப் பொருட்களை வைப்பதற்கு அரேனா ஹாலில் சுமார் 2,000 தன்னார்வலர்கள் ஒன்று கூடியிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு திடீரென வருகை புரிந்த மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் துருக்கி-சிரிய மக்களுக்காக ஒரு அஞ்சல் அட்டையில் குறிப்பு எழுதி கையெழுத்திட்டுள்ளார். அதில் மக்கள் நேர்மறை எண்ணத்துடன் (stay positive) இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் எழுதிய போஸ்ட் கார்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது, அதில் “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நாங்கள் எப்போதும் உங்கள் பக்கத்தில் இருப்போம். எங்களின் அனைத்து ஆதரவும் உங்களுக்கு உண்டு. நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்…’’ என்று அவர் கைப்பட எழுதியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் உதவ ஐக்கிய அரபு அமீரகம் விடுத்த அழைப்புக்கு விரைவாக பதிலளித்த தன்னார்வலர்களையும் பாராட்டியுள்ளார்.

இதற்கிடையில் அரச குடும்பத்தின் பேரப்பிள்ளைகள் நிவாரணப் பொருட்களை பேக் செய்ய உதவியதுடன், அவர்களுடன் சேர்ந்து துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்ன் அவர்கள் உணவுப் பெட்டிகளை பேக்கிங் செய்ய உதவி புரிந்துள்ளார்.

ஷேக் முகம்மது அவர்களின் வருகை குறித்து இந்தியரும் தன்னார்வத் தொண்டருமான சஜ்னா அப்துல்லா என்பவர் கூறியதாவது: “ஷேக் முகம்மது அவர்கள் உள்ளே நுழைந்ததைக் கண்டு மெய் சிலிர்த்து போனேன். அவரை முதன்முறையாக நேரில் பார்த்தது நம்பமுடியாததாக இருந்தது. துபாய் ஆட்சியாளர் எங்களின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார், அது எங்கள் அனைவருக்கும் மிகவும் உற்சாகமாக இருந்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த எங்களால் தொலைபேசிகளை கீழே வைக்க முடியவில்லை, தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவு செய்தோம் மற்றும் அவரது புகைப்படங்களையும் மற்ற அரச குடும்பத்தாரையும் படம் பிடித்தோம்” என்று கூறியுள்ளார்.

அதேசமயம், எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட்டின் (ERC) இயக்குநர்கள் குழுவின் தலைவர் டாக்டர் ஹம்தான் முஸல்லம் அல் மஸ்ரூயி கூறுகையில், ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் வருகை மனிதாபிமான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான அவரது ஆதரவை வெளிப்படுத்துவதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!