அமீரக செய்திகள்

UAE: உம்ரா, ஹஜ் செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி கட்டாயம்..!! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வெளியிட்ட அமைச்சகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MOHAP) சவூதி அரேபியாவிற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்ய செல்லும் அனைத்து யாத்ரீகர்களும் மார்ச் 26 முதல் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக அமைச்சகத்தின் இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பயணத்திற்கு முன் யாத்ரீகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பின்வரும் வழிகாட்டுதல்களை அமைச்சகம் வழங்கியுள்ளது.

யாத்ரீகர்கள் தங்கள் பயணத் தேதிக்கு முன்னதாகவே ஒரு சுகாதார நிலையத்திற்குச் சென்று தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவதை உறுதிசெய்யுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதாவது, தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதம் அளிக்க, புறப்படுவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா மேற்கொள்வதற்கான தங்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தங்கள் மருத்துவரை அணுகி அதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கூடுதலாக, கடந்த ஆண்டிற்குள் காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் பெற்ற யாத்ரீகர்களுக்கு புதிய டோஸ் தேவையில்லை எனவும், அவர்களுக்கு தடுப்பூசி அட்டையை காட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் போது பயண சோதனைச் சாவடிகளில் அல் ஹோஸ்ன் செயலி மூலம் கிடைக்கும் தடுப்பூசி அட்டையை வழங்கலாம். குறிப்பாக, யாத்ரீகர்கள் அனைவரும் தேவையான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நோய்த்தடுப்பு மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறையின் உதவி துணைச் செயலர் டாக்டர் ஹுசைன் பேசுகையில், “இந்த முயற்சி யாத்ரீகர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும், இது நமது சமூகத்தை தொற்று மற்றும் நாட்பட்ட நோய்களின் பாதகமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் உள்ளது” என கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின் கீழ், நாட்டிலுள்ள சுகாதார மையங்கள் முழுவதும் யாத்ரீகர்களுக்காக இந்த தடுப்பூசிகள் சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. அத்துடன் யாத்ரீகர்கள் தங்கள் யாத்திரையின் போது உடல்நல அபாயங்களைக் குறைக்க மேற்கூறிய தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!