அமீரக செய்திகள்

சவூதி: ஒரே வாரத்தில் 16,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது.. விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை..

சவூதி அரேபியாவின் குடியுரிமை, தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை அத்துமீறும் செயல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சாரங்களில் ஒரு வாரத்தில் மட்டும் 16,288 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறியதாவது, ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை கைது செய்யப்பட்டவர்களில், அரசாங்கத்தின் குடியுரிமை விதிகளை 9,343 பேரும், எல்லைப் பாதுகாப்பு விதிகளை 4,107 பேரும், தொழிலாளர் விதிமுறைகளை 2,838 பேரும் அத்துமீறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வாறு ஊடுருவிய அந்நியர்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பணியமர்த்துதல் போன்றவற்றில் உதவி செய்த 19 பேரையும் அதிகாரிகள் அதே காலகட்டத்தில் கைது செய்துள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபிய காவல்துறையினர் சமீப காலமாக எல்லை பாதுகாப்பு சட்டத்தை மீறி நாட்டிற்குள் நுழைபவர்கள் மற்றும் அரசாங்க விதிகளை மீறுபவர்கள் போன்றோருக்கு உதவி வழங்கி வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டறிந்து கைது செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டிற்குள் செயல்பட்ட சுமார் 2,115 பெண்கள் உட்பட மொத்தம் 24,246 குற்றவாளிகள் மீது தற்போது நாடு கடத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அத்துமீறிய 11,552 பேரும் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் பலமுறை எச்சரித்துள்ள நிலையில், கடந்த மாதம், அல் பஹாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சவுதி காவல்துறையினர், எல்லை பாதுகாப்பு சட்டத்தை மீறி 11 வெளிநாட்டவர்கள் சவூதிக்குள் நுழைய வாகனம் வழங்கி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்த இரண்டு சவூதி குடிமக்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம் அல்லது வேறு ஏதேனும் உதவிகளை வழங்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தகைய குற்றங்கள் புரியும் நபர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!