அமீரக சட்டங்கள்

UAE: எந்தெந்த காரணங்களுக்காக முதலாளி தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யலாம்..? சட்டம் சொல்வது என்ன..?

ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின்படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு முதலாளி தனது நிறுவனத்தில் ஒரு தொழிலாளியை பணியமர்த்தும் போது, அதற்கான பணியமர்த்தல் செலவை அதாவது விசா வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், மருத்துவ பராமரிப்பு மற்றும் காப்பீடு போன்றவற்றிற்கான செலவினங்களை தொழிலாளியின் சம்பளத்திலிருந்து கழிப்பது தடை செய்யப்பட்டதாகும்.

இருப்பினும் பணியமர்த்தப்பட்ட ஒரு தொழிலாளியின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் சில விதிமுறைகளின் கீழ் தகுந்த காரணங்களுக்காக பிடித்தம் செய்ய அமீரக தொழிலாளர் சட்டம் முதலாளிகளுக்கு அனுமதி வழங்குகிறது. எவ்வாறாயினும், எல்லா சந்தர்ப்பங்களிலும் பிடித்தம் செய்யப்படும் சதவீதமானது ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பதையும் சட்டம் கூறுகிறது.

அமீரகத்தின் தொழிலாளர் சட்டத்தின்படி, பின்வரும் எட்டு வழக்குகளின் கீழ் முதலாளி தனது தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடியும். இந்த காரணங்களை தவிர தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து எந்தத் தொகையும் கழிக்கப்படக்கூடாது அது பற்றி கீழே காண்போம்.

>> முதலாளி தனது தொழிலாளிக்கு வழங்கப்பட்ட கடனை மீட்டெடுக்க, தொழிலாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்று, வழங்கப்பட்ட தொகைக்கு எந்த வட்டியும் கணக்கிடாமல், தொழிலாளியின் மாதாந்திர ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு மிகாமல் பிடித்தம் செய்ய அனுமதி உண்டு.

>> தொழிலாளிக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை மீட்டெடுக்க, தொழிலாளரின் ஊதியத்தில் 20 சதவீதத்திற்கு மிகாமல் பிடித்தம் செய்யலாம்.

>> போனஸ், ஒய்வூதியம், பென்ஷன் மற்றும் காப்பீடுகளில் தொழிலாளர்களின் பங்களிப்புக்காக ஊதியத்தில் கழித்து கொள்ள முடியும்.

>> நிறுவனத்தின் சேமிப்பு நிதிக்கான தொழிலாளியின் பங்களிப்புகள் அல்லது மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கு செலுத்த வேண்டிய கடன்களை தொழிலாளியின் ஊதியத்தில் கழித்து கொள்ள அனுமதி உண்டு.

>> எந்தவொரு சமூகத் திட்டத்திற்கான தவணைகள் அல்லது முதலாளியால் வழங்கப்படும் மற்றும் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற நன்மைகள் அல்லது சேவைகள் போன்ற திட்டத்தில் பங்குபெற தொழிலாளி எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டால், அதற்கான தொகையை ஊதியத்தில் கழித்து கொள்ளலாம்.

>> விதிமீறலில் ஈடுபட்ட தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய முதலாளிக்கு அனுமதி உண்டு. எனினும் நிறுவனத்தில் விதிக்கப்படும் அபாரதங்கள் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.மேலும் இதற்காக கழிக்கப்பட்ட தொகை ஊதியத்தில் ஐந்து சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

>> நீதிமன்ற தீர்ப்பின்படி தொழிலாளியின் கடன்கள், அவருக்கு வழங்கப்பட்ட ஜீவனாம்சக் கடனைத் தவிர ஊதியத்தில் கால் பங்கிற்கு மிகாமல் கழித்து கொள்ளலாம். தொழிலாளிக்கு பல கடன்கள் இருந்தால், செலுத்த வேண்டிய தொகைகள் வகைகளின்படி விநியோகிக்கப்படும்.

>> தவறுதலாக அல்லது அத்துமீறலாக முதலாளிக்குச் சொந்தமான கருவிகள், இயந்திரங்கள், பொருட்கள் போன்றவற்றிற்கு தொழிலாளியால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்குத் தேவையான தொகைகள், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தவிர, நேரடியாக நிறுவனத்தால் கழிக்கப்படும்தொகைகள் மாதத்திற்கு ஐந்து நாட்களுக்கான ஊதியத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.

Related Articles

Back to top button
error: Content is protected !!