அமீரக செய்திகள்

துபாயில் நடந்த நீச்சல் போட்டியில் 17 வயது இந்திய மாணவி சாதனை.. 5 தங்கம் 2 வெள்ளி வென்று அசத்தல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 19 வயதுக்குப்பட்ட பள்ளி மாணவிகளுக்கான CBSE UAE நீச்சல் கிளஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் – 2023 நீச்சல் போட்டி துபாயில் நடத்தப்பட்டுள்ளது. அதில் இந்திய வெளிநாட்டவரான ஸ்ரேயா ஜெயின் என்ற 17 வயது மாணவி, நடந்த ஏழு போட்டிகளிலும் கலந்து கொண்டு ஐந்து தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கவே, இவர் இந்தாண்டு நடைபெற்ற துபாய் ஸ்கூல் கேம்ஸ் போட்டியிலும் பங்கேற்று ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து நீச்சல் போட்டிகளில் சாதனைகளை படைக்க முனைப்பு காட்டி வரும் ஸ்ரேயா, தனது இரண்டு வயதிலேயே தண்ணீரின் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். அதாவது அவரது சிறு வயதில் நடக்கத் தொடங்குவதற்கு முன்பே தண்ணீரில் விளையாடுவதில் ஆர்வமாக இருந்ததாகவும், இதனைப் புரிந்து கொண்டு குழந்தை பருவத்திலேயே அவரை நீச்சல் குளத்தில் பயிற்சிக்கு அனுப்பியதாகவும் ஸ்ரேயாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

முதல் நீச்சல் போட்டி:

சாதனை மாணவி ஸ்ரேயா முதல் முறையாக பெங்களூரில் முதல் வகுப்பில் (First Grade) படிக்கும் போது நீச்சல் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதனையடுத்து 2015 இல் துபாய்க்கு இடம்பெயர்ந்த பின், பள்ளி பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்று முறையாக நீச்சலை கற்றுக்கொண்டுள்ளார். ஸ்ரேயாவுக்கு நீச்சலில் மிகுந்த ஆர்வம் இருப்பதை உணர்ந்த அவரது பயிற்சியாளர், தொழில் ரீதியாக பயிற்சி பெற ஒரு அகாடமியில் சேர்ந்தால் சிறந்தது என்று கூற, அதன்படி அகாடெமியில் சேர்ந்து பல்வேறு நிலை நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

2019 இல், CBSE கிளஸ்டர்ஸ் சார்பாக ராஜஸ்தானில் நடந்த மாநில அளவிலான போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தையும், அதன் பிறகு போபாலில் நடைபெற்ற CBSE நேஷனல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஆதரவு:

பல இளம் விளையாட்டு வீரர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் தங்களின் பங்களிப்பை ஒரே சமயத்தில் வழங்க பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். அதே போன்று தனக்கும் இது பெரிய சவாலாக இருந்ததாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் அவரின் பள்ளி ஆசிரியர்களும், பயிற்சியாளரும் பெரிதும் ஆதரவாக இருந்ததாகவும், வகுப்புகளுக்கு செல்ல வேண்டியிருக்கும் போது அல்லது பிற கல்விக் கடமைகள் இருக்கும்போது பயிற்சியாளர் நீச்சல் பயிற்சி அட்டவணையை மாற்றிவிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரரான இளம் நீச்சல் வீரர் ஸ்ரேயா, PADI Open Water Diver Certification என்ற சான்றிதழ் படிப்பையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பு சாரந்த துறையில் பணிபுரிவதற்கு ஏதுவாக பல்வேறு சான்றிதழ் படிப்புகளை முடிக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!