அமீரக செய்திகள்

UAE: குடியிருப்பாளர்கள் தங்களுக்கு தேவையான தனிப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ள அமைச்சகம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய விரும்பினால் இ-பெர்மிட்டைப் பெற்று மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இறக்குமதி செய்யலாம் என்று அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அறிவித்துள்ளது. மேலும் இரண்டு ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி மருந்துகளை இறக்குமதி செய்துகொள்ளுமாறும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தனிப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்ய விரும்பும் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் MoHAP இணையதளம் அல்லது ஸ்மார்ட் ஆப் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்து நாட்டின் துறைமுகங்களுக்கு வந்தவுடன் அவற்றை சுங்க அதிகாரிகளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்றும், சுங்க அதிகாரிகள் அமைச்சகத்துடன் ஒருங்கிணைத்து கிடைக்கக்கூடிய ஆவணங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இரண்டு சேவைகளையும் அணுக, MoHAP இணையதளம் அல்லது ஸ்மார்ட் ஆப் மூலம் உள்நுழைந்து தேவையான தரவை நிரப்ப வேண்டும் என்றும் பின்னர், தேவையான ஆவணங்களை இணைத்து மின்னணு முறையில் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றை இறக்குமதி செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் அமைச்சகம் விதித்துள்ளது. அதன்படி, நாட்டிற்கு வரும் தனிநபர்கள், நாட்டில் தங்கியிருக்கும் போது அவர்களது தனிப்பட்ட உபயோகத்திற்குத் தேவையான அளவு (ஆறு மாதங்களுக்கு மிகாமல்) மருந்தை மட்டும் கொண்டுவர அனுமதி உள்ளது. இருப்பினும் அவர்கள் Narcotics மருந்துகள் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை கொண்டு வர வேண்டும் என்றால், உரிய அனைத்து ஆவணங்களுடன் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருக்கக்கூடிய அளவு மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யக்கூடிய மருத்துவ உபகரணங்கள்:

மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்யும் சேவையானது சுகாதார நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, அமைச்சகத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மருத்துவக் கிடங்கு உரிமம் (medical warehouse license) வைத்திருக்கும் உள்ளூர் முகவர்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் காண்டாக்ட் லென்ஸ் உட்பட அறுவை சிகிச்சை சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், அறுவை சிகிச்சை அழகியல் மருத்துவம், பல் தொழில், செயற்கை பாகங்கள் போன்ற பலதரப்பட்ட பொருட்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மருந்து அனுப்பப்படும் நாட்டிலிருந்து ஏற்றுமதி செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு ஆரம்ப இறக்குமதி கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும், இந்த கட்டத்தில் வாடிக்கையாளர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆரம்ப கோரிக்கை தேவைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், அது அறுபது நாட்களுக்கு செல்லுபடியாகும் நிலையில், வாடிக்கையாளர்கள் தேவையான லாஜிஸ்டிக் நடைமுறைகளை முடிக்க வேண்டும். அதேவேளை, தேவையான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்புதல் மின்னணு முறையில் வழங்கப்படும். அனுமதியை மின்னணு அமைப்பிலிருந்து ப்ரிண்ட் செய்து கொள்ளலாம் மற்றும் வழங்கப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOHAP இன் மருந்துத் துறைத் தலைவர் டாக்டர் ருகாயா அல் பஸ்தாகி அவர்கள் கூறுகையில், தனிப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவது, நாட்டின் சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதில் ஒரு முக்கியமான படியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், போலி மருந்துகள் மற்றும் உரிமம் பெறாத உபகரணங்களை விநியோகிப்பதைத் தடுக்கவும் இது உதவுவதால் நோயாளிகளை சாத்தியமான தீங்குகளிலிருந்து பாதுகாக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!