வளைகுடா செய்திகள்

சவூதியில் 7.5 மில்லியன் மரங்களை வளர்க்க 1350 கி.மீ நீளத்தில் நீர் பாசன திட்டம் அறிமுகம்… 10 ஆண்டுகளில் 10 பில்லியன் மரங்களை நடவும் இலக்கு!!

சவுதி அரேபியா நாட்டின் ‘பசுமை ரியாத் திட்டம்’ திட்டத்தின் மூலம் தலைநகரில் உள்ள சுமார் 7.5 மில்லியன் மரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய மொத்தம் 1,350 கிமீ நீளமுள்ள தண்ணீர் நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தை ரியாத் முனிசிபாலிட்டி தொடங்க உள்ளது.

நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக, ரியாத் பகுதியிலுள்ள பசுமையான பகுதிகளை மேலும் வளமாக்கும் நோக்கத்தில் இந்த நீர் நெட்வொர்க் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 1.7 மில்லியன் கனமீட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை பாசன நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரை வழங்கும் நெட்வொர்க்குகளின் விட்டம் 1.2 முதல் 2.4 மீட்டர் வரை இருக்கும் என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு துணை நெட்வொர்க் மூலம் ரியாத்தின் அனைத்து சுற்றுப்புறங்களையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ரியாத்தின் போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்த தண்ணீர் நெட்வொர்க்கினை அமைக்க பல புது தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது.

நீர் பாசனத்தை முறையாக பயன்படுத்தும் வண்ணம் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த நெட்வொர்க் அமைக்கப்படும் என்று திட்டக்குழு கூறியுள்ளது. மேலும் நூறு சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துவதன் மூலம் தரமான நீர் பாசனத்தை அடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பாக ஒருங்கிணைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், சிரமங்களைச் சமாளிப்பதற்கும், பாசன நீர் வலையமைப்புகளை செயல்படுத்துவதில் உள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையைக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நீர் பாசனம் தொடர்பான அரசின் திட்டங்களை மக்களுக்கு சிறப்பாக கொண்டு சேர்க்கும் வகையில் சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகம் (MEWA), சவுதி நீர்ப்பாசன அமைப்பு மற்றும் தேசிய நீர் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த குழுவானது பணியாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பல முக்கிய திட்டங்களான பொது முதலீட்டு நிதிகள் (PIF), திரியா கேட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (DGDA), கிங் சல்மான் பார்க், ஸ்போர்ட்ஸ் பவுல்வர்டு போன்ற அரசின் திட்டங்களில் இந்த நீர் பாசன நெட்வொர்க்குகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மானின் முன்முயற்சியின் கீழ், ரியாத்தில் செயல்படுத்தப்படும் முக்கியமான 4 திட்டங்களில் பசுமை ரியாத் திட்டமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன் ரியாத் திட்டமானது சவூதியின் தலைநகரம் முழுவதும் 7.5 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அத்துடன் ரியாத்தின் பகுதியில் இருந்து தாவரங்களின் பரப்பளவை 9.1% ஆக அதிகரிக்கவும், தனிநபர் பசுமைப் பகுதியை 1.7 சதுர மீட்டரிலிருந்து 28 சதுர மீட்டராக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் சவூதி அரேபியாவிற்குள் 10 பில்லியன் மரங்கள் நடப்பட்டு சவுதி அரேபியா நாட்டின் ‘விஷன் 2030’ திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தின் மூலம், நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு வளமான நாட்டை வழங்கும் திட்டமாக இது இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

Related Articles

Back to top button
error: Content is protected !!