அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதத்தில் குடியிருப்பாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்ன.? சிறு பார்வை..!!

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் புனித ரமலான் மாதம் எதிர்வரும் மார்ச் 23 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானியல் கணக்கீடுகள் தெரிவித்துள்ளது. ஆகவே, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த நேரத்தில் விடியற்காலையில் இருந்து சாயங்காலம் வரை சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்த்து நாள் முழுவதும் நோன்பு வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் மாதம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அமீரகத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதத்தை முழு வீச்சில் தொடங்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர், ஏனெனில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கோவிட் தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்த ஆண்டு ரமலான் மாதம் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது, முகக் கவசம் அணிதல், பயணக் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி மற்றும் மசூதிகளுக்குச் செல்ல கட்டுப்பாடு போன்ற விதிகள் முழுமையாக நீக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட செயல்களுக்கு ரமலான் மாதம் முழுவதும் அமீரக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவ்வாறு  பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன எனபது பற்றி கீழே காணலாம்.

சாப்பிட மற்றும் குடிக்கத் தடை:

ஐக்கிய அரபு அமீரகத்தின் தண்டனைக் குறியீட்டின்படி (Penal Code), புனித மாதத்தில் பொது இடங்களில் சாப்பிடுவது அல்லது குடிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, எனினும், இந்த விதிகள் உட்புற நிறுவனங்களுக்கு பொருந்தாது, அதாவது முஸ்லீம் அல்லாதவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு சேவை செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள பல மால்கள் மற்றும் உணவகங்கள் புனித மாதத்தில் பகல் நேரங்களில் திறந்திருக்கும். ஆகவே, அங்கெல்லாம் இந்த விதிகள் பொருந்தாது.

அதுபோல, உணவு மற்றும் பானங்களை வழங்குவதில் உள்ள இந்த கட்டுப்பாடுகள் துபாக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது, நோன்பு கடைபிடிக்காதவர்கள் வீட்டிற்குள் அல்லது நியமிக்கப்பட்ட இடங்களில் சாப்பிடவும் குடிக்கவும் அனுமதி உண்டு.

வாக்குவாதம் தவிர்த்தல்:

புனித மாதத்தில், நோனபு இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதை குடியிருப்பாளர்கள் தவிர்த்துகொள்ள வேண்டும்.

அதிக ஒலியுடன் இசை:

புனித மாதத்தில் தொழுகை அல்லது குர்ஆன் ஓதக் கூடிய முஸ்லிம்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கார்களிலோ அல்லது வீடுகளிலோ அதிக சத்தத்துடன் இசைப்பதைத் தவிர்க்க வேண்டும், மேலும் ரமலான் மாதத்தில் அதிக சத்தத்துடன் இசைப்பதற்கு மால்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அடக்கமான ஆடைகளை அணிதல்:

ரமலான் மாதத்தில் குடியிருப்பாளர்கள் பொது இடங்களில் இருக்கும்போது அடக்கமாக உடையை அணிய வேண்டும், அதாவது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான விதியாக, தங்கள் தோள்கள், உடல் மற்றும் முழங்காலுக்கு மேலே உள்ள பகுதிகளை மறைத்துள்ளவாறு ஆடைகளை அணிய வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!