அமீரக செய்திகள்

துபாயை நோக்கி படையெடுக்கும் உலக மக்கள்..!! முதல் 6 மாதங்களிலேயே ரெசிடென்ஸி விசாக்களில் 63% அதிகரிப்பு..!!

துபாயில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாக்களில் 63 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவு விவரங்களானது மதீனத் ஜூமேராவில் வரும் செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறவுள்ள ‘International Conference on Policymaking: The Future of Ports’ என்ற மாநாடு பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டுள்ளது.

துபாய் அரசாங்க ஊடக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில், 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வழங்கப்பட்ட கோல்டன் விசாக்களின் எண்ணிக்கையில் துபாய் 52 சதவிகிதம் முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக, GDRFAஇல் வெளிநாட்டினருக்கான பின்தொடர்தல் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் கலாஃப் அல் கெய்த் கூறியுள்ளார்.

அதேபோல், விசிட் விசாவில் 34 சதவீத உயர்வையும், சுற்றுலா விசாவில் 21 சதவீத உயர்வையும் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2022 ஆம் ஆண்டில் விமானம், நிலம் மற்றும் துறைமுகங்கள் வழியாக நுழைவு மற்றும் வெளியேறும் மற்றும் ரெசிடென்ஸி விசா பரிவர்த்தனைகள் உட்பட சுமார் 11,319,991 பரிவர்த்தனைகளை GDRFA-துபாய் செயல்படுத்தியதாகவும் அல் கெய்த் கூறியுள்ளார்.

மதீனத் ஜுமைராவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில், எல்லை மேலாண்மை, குடியேற்றம் மற்றும் ரெசிடென்சியில் புதுமையான நடைமுறைகள் பற்றி விவாதிப்பதற்கு அமீரகம், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து 23 உலகத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் பயணத் தேவைகள், தேவையான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள்வதில் உள்ள சவால்கள் பற்றிய விவாதங்களும் இந்த மாநாட்டில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் 2040 ஆம் ஆண்டில் உலகளவில் 19 பில்லியன் பயணிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் விமான போக்குவரத்தை சமாளிக்க புதுமையான முறைகள் மற்றும் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் தயார்நிலை மற்றும் உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணங்களை பொறுத்தவரை உலகளவில் துபாயானது ஒரு முக்கிய மையமாக செயல்பட்டு வருகிறது. துபாயில் இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 42 மில்லியன் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர் என்றும், அவர்களில் 26 மில்லியன் பேர் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளை பயன்படுத்தியதாகவும் மீதமுள்ளவர்கள் டிரான்ஸிட் பயணிகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் DXBஇல் இதுவரை 42 சதவீத பயணிகள் ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தியுள்ள நிலையில், வரும் காலத்தில் ஸ்மார்ட் கேட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விமான நிலையத்தை முழுமையாக பயோமெட்ரிக் முறையில் மாற்ற அதிகாரிகள் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!