அமீரக செய்திகள்

பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் வரும் தமிழக முதல்வர்..!!

அமீரகத்தில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 துபாய்க்கு தமிழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்போவில் உள்ள இந்தியன் பெவிலியனில் ஒவ்வொரு மாநிலமும் கலை, அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் புதுப்புது நிகழ்வுகளை எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி வருகின்றன.

அதன் வரிசையில் தற்பொழுது தமிழக அரசின் சார்பாக நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. கலாச்சாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் இதில் பங்கேற்க உள்ளன. இதற்காக தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வரும் மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்போவில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சரான பின்னர் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கேரளாவின் முதலமைச்சரான பினராயி விஜயன் எக்ஸ்போவிற்கு வருகை தந்திருந்தார். அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களில் அதிக எண்ணிக்கையில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களே இருப்பதால் இது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. மேலும் இவரை வரவேற்று துபாய் ஆட்சியாளர் மலையாளத்தில் ட்வீட் செய்ததும் அதற்கு பதிலளிக்கும் விதமாக கேரள முதல்வர் அரபு மொழியில் ட்வீட் செய்ததும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பின்படி, தமிழக முதல்வர் அமீரகத்திற்கு வருகை புரிந்தால் அமீரகம், தமிழகம் இடையேயான பொருளாதார வளர்ச்சி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக முதல்வரின் வருகையின் போது தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒரு சில ஒப்பந்தங்கள் துபாயில் கையெழுத்தாகவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 ஆனது இந்த மாதம் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆறு மாத காலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த எக்ஸ்போவில், மார்ச் இறுதியில் தமிழக முதல்வர் வருவதையொட்டி இதுவே இந்திய பெவிலியனின் கடைசி முக்கிய நிகழ்வாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!