அமீரக செய்திகள்

குளிர்காலம் துவங்குவதால் ஹத்தாவில் பாதுகாப்பை அதிகரிக்கும் துபாய் காவல்துறை..!!

அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கியதை முன்னிட்டு அமீரகத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. குறிப்பாக, அமீரகத்தில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற மலைகளுக்கு மற்றும் அவற்றின் உச்சிக்கு சென்று குளிர்காலத்தில் தங்களுடைய நேரத்தை கழிப்பது அமீரகவாசிகள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. அவற்றுள் துபாயில் வசிக்கும் நபர்கள் பெரும்பாலும் அடிக்கடி செல்லும் இடம் ஹத்தா (Hatta) எனும் மலைப்பகுதிக்கே.

இந்த வருட குளிர்காலம் ஆரம்பித்து விட்டதால் ஹத்தாவிற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்த குளிர்காலத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக துபாய் காவல்துறையினர் ஹத்தாவில் பாதுகாப்பு ரோந்து மற்றும் அவசரகால உதவியை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஹத்தா காவல் நிலைய இயக்குனர் கலோனல் முபாரக் அல் கெத்பி அவர்கள், அங்கிருக்கும் அணைகள் அருகே ரோந்துப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்து வருவதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் எந்தவொரு சம்பவத்தையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேலும், அவர் குடியிருப்பாளர்களை வானிலை நிலையற்றதாக இருக்கும்போது பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, வழக்கமான ரோந்து வாகனங்களுக்குப் பதிலாக, இந்த பகுதிகளில் போக்குவரத்து ரோந்து வாகனங்களை அவர்கள் பணிக்கு நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“இந்த ரோந்து வாகனங்களில் கரடுமுரடான நிலப்பரப்புக்காக வடிவமைக்கப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புகொள்வதற்கான சமீபத்திய ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. மீட்புக்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் இதில் உள்ளன” என்று அவர் விளக்கியுள்ளார்.

பொதுமக்கள் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கெத்பி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஹத்தா காவல் நிலையம் துபாய் மாநகராட்சி (Dubai Municipality), சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority), துபாய் சிவில் பாதுகாப்பு (Dubai Civil Defence) மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான துபாய் கார்ப்பரேஷன் (Dubai Corporation for Ambulance Services) ஆகியவற்றுடன் இணைந்து வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!