அமீரக செய்திகள்

UAE: 5 நிமிடங்களுக்குள் உலக நாடுகளின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் பட்டியலிட்டு சாதனை படைத்த 5 வயது இந்திய சிறுமி..!!

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளையும் அவற்றின் தலைநகரங்களையும் 5 நிமிடங்களுக்குள்ளாக பட்டியலிட்டு உலக சாதனை படைத்துள்ளார் ஐந்தே வயதான அமீரக வாழ் இந்திய சிறுமி. 195 நாடுகளையும் அவற்றின் தலைநகரங்களையும் 4 நிமிடங்கள் 23 வினாடிகளுக்குள் பட்டியலிடுகிறார் ஐந்து வயதான பிரான்வி.

இந்தியாவை சேர்ந்த பிரன்வி குப்தா தனது இந்த தனித்துவமான திறமைக்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) மற்றும் ஆசியா ரெக்கார்ட்ஸ் (Asia Book of Records) ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளார். மேலும், கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற போட்டியிட இருக்கிறார்.

துபாயில் உள்ள ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியின் மாணவரான, பிரன்வியின் அறை சுவர்கள் முழுவதும் உலக வரைபடங்களே இருக்கின்றன. மேலும், அவரது விளையாட்டு பொருட்களில் குளோப்ஸ் மற்றும் வரைபடங்களே பெரிதும் இடம்பெறுகின்றன.

இது குறித்து அவரது தந்தை பிரமோத் குப்தா கூறுகையில், “ஒரு வருடம் முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தபோது அதில் எட்டு வயது சிறுமி அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் கூறும் காட்சியை பார்த்ததில் இருந்து பிரான்விக்கு இந்த ஆர்வமானது தொடங்கியது” என்று கூறினார்.

அதன் பிறகு நாடுகளின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் கற்றுக்கொள்ள பிரான்வி விருப்பம் தெரிவித்தபோது, ​​அவரது தாயார் பிரியங்கா மகளுக்கு புதிதாக ஒன்றைக் கற்பிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அவர் அகர வரிசைப்படி ஒரு பட்டியலை உருவாக்கி, அதை பிரான்வியை நினைவில் வைத்துக் கொள்ள கற்றுக்கொடுத்ததாக அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து கூறுகையில், “ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, பிரன்வி அனைத்து நாடுகளின் பெயர்களையும், அவர்களின் தலைநகரங்களையும் A முதல் Z வரை மனப்பாடம் செய்ய முடிந்தது. பின்பு நாங்கள் அவள் பட்டியலிடும் வேகத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தோம். ஆரம்பத்தில், இதற்கு அவளுக்கு 11 நிமிடங்கள் பிடித்தது, பின்னர் படிப்படியாக அவள் எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்து கொண்டே வந்தது. தற்பொழுது அவள் நான்கு நிமிடங்கள் 23 வினாடிகளுக்குள் முடித்து விட்டாள். அவளது கடின உழைப்புக்கு பல விருதுகளையும் பதக்கங்களையும் வென்றதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்”

“கொரோனா பரவி வந்த சமயங்களில் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்த போது உலக நாடுகள், மொழிகள், மற்றும் பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்கள் பற்றி விவாதிப்போம். மேலும், பிரான்விக்கு கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு, கதை புத்தகங்கள், பசுமை பாதுகாப்பு, புதிர் போன்ற பல நடவடிக்கைகளை ஈடுபட செய்தோம்” என்றும் அவர் தந்தை கூறினார். அதன் பின்னர், பிரான்வி Youtube Channel ஒன்று தொடங்கி தான் கற்றவற்றை எல்லாம் பதிவிடத் தொடங்கியிருக்கிறார்.

தற்பொழுது பிரான்வி தனது அடுத்த இலக்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் அவற்றின் தலைநகரங்களையும் கற்றுக்கொண்டு இருக்கிறார். மேலும், உலக நாடுகளின் பெயர்களை அவற்றின் தேசிய கொடிகளைக்கொண்டு அடையாளம் காணும் திறனையும் கற்றுக்கொண்டிருப்பதாக அவர் தந்தை கூறியுள்ளார். அவர் தொடர்ந்து அடுத்தடுத்து பல சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோம்..

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!