அமீரக செய்திகள்

துபாய்: இனி விசா தொடர்பான சேவைகளை வீடியோ கால் மூலம் பெறலாம்.. புதிய வசதி அறிமுகம்..!!

உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் துபாயின் ரெசிடென்ஸி தொடர்பான பரிவர்த்தனைகளை இனி ஒரு வீடியோ கால் மூலம் செய்து கொள்ள முடியும் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. துபாயின் ரெசிடென்ஸி மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) இந்த சேவையை புதன்கிழமை (ஜனவரி 11) முதன் முதலில் தொடங்கியுள்ளது.

இந்த புதிய சேவை மூலம் விண்ணப்பதாரர்கள் ஆவணங்கள் மற்றும் முழுமையான ரெசிடென்ஸி தொடர்பான விண்ணப்ப நடைமுறைகளை எளிதில் சமர்ப்பிக்கலாம். மேலும் இந்தச் சேவையானது, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நபர்கள், இந்த துறையின் ஊழியர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள உதவுகிறது.

இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் GDRFA-ன் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லாமல் வெறும் 5 நிமிடங்களிலேயே ரெசிடென்ஸி தொடர்பான செயல்முறையை முடிக்கலாம். மேலும் இந்த சேவையை முன்பக்க கேமராவை கொண்ட எந்த ஒரு மொபைல் போன் மூலமாகவும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுபட்ட அல்லது தெளிவற்ற ஆவணத்தைக் கண்டறிந்தால் அல்லது விசா வழங்குவதற்கு விண்ணப்பதாரரிடமிருந்து கூடுதல் தகவல் தேவைப்பட்டால், விசா வழங்கும் அதிகாரிகள் விண்ணப்பதாரர்களை இந்த வீடியோ கால் சேவையின் மூலம் தொடர்பு கொள்ளலாம். தனிநபர்கள் வீடியோ கால் மூலம் அதிகாரியுடன் பேசும்போது தேவையான ஆவணங்களை சாட் பாக்ஸ் வழியாக பதிவேற்றலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து GDRFA-ன் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அல் மர்ரி கூறுகையில், “புதிய வீடியோ கால் சேவை மூலம் GDRFA வழங்கும் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக எளிதில் பெறலாம். மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பித்த பிறகு GDRFA-ன் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் பின்தொடரவும் முடியும்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் இந்த சேவையை எந்த வகையான விசாவையும் வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இதில் ரெசிடென்ஸி விசாக்கள், கோல்டன் விசாக்கள், கிரீன் விசாக்கள், மாணவர் விசாக்கள் மற்றும் விசிட் விசாக்கள் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் கூறுகையில் “சில நேரங்களில், வாடிக்கையாளர் ஒரு சில ஆவணங்களின் தேவைக்காகவோ அல்லது விடுபட்ட ஆவணத்தை சமர்ப்பிக்கவோ நேரடியாக அலுவலகம் வர வேண்டியிருக்கும். தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சேவையானது, அந்த தேவையை நீக்கி ஒரு அதிகாரியை நேரடியாகப் பார்க்கவும் பேசவும் மக்களை அனுமதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “Amer கால் சென்டர் விசா விண்ணப்பிப்பதற்கு முன் விசாரிப்பதற்கானது, ஆனால் வீடியோ கான்ஃபரன்ஸ் சேவையானது ஏற்கனவே விண்ணப்பத்தை சமர்ப்பித்து தாமதம் ஏற்பட்டால் அதனை பின்தொடர்வதற்கு உதவி புரியும்” எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள், வாரத்தில் ஏழு நாட்களும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த நேரத்திலும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். இதனை 24 மணி நேர சேவையாக மாற்றுவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. 

அத்துடன் இந்த சேவையினை Amer சேவை எண் 8005111, GDRFA இணையதளம் மற்றும் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!