அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டை முன்னிட்டு புதிய உலக சாதனை படைக்கவிருக்கும் 35 நிமிட தொடர் வான வேடிக்கை..!! இரண்டு உலக சாதனைகளை முறியடிக்கும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ராஸ் அல் கைமா மற்றும் அஜ்மானில் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்ட வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதே போன்று, அபுதாபியில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை முறியடிக்கும் விதமாக மிக பிரம்மாண்ட முறையில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட இருப்பதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு வான வேடிக்கை நிகழ்ச்சிகளில் உலக சாதனை படைப்பது அமீரகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே துபாய் புர்ஜ் கலீபா, ராஸ் அல் கைமாவில் புத்தாண்டை முன்னிட்டு “ஒரே நேரத்தில் அதிக ஆளில்லா வான்வழி வாகனங்கள் மூலம் தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்கச் செய்தல்” (Most Unmanned Aerial Vehicles for Launching Fireworks Simultaneously) மற்றும் “மிக நீண்ட பட்டாசு நீர்வீழ்ச்சி” (Longest Fireworks Waterfall) ஆகியவற்றுக்கான கின்னஸ் உலக சாதனை போன்றவை நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், தற்பொழுது அபுதாபியில் அறிவித்திருக்கும் இந்த வியத்தகு வான வேடிக்கை நிகழ்வானது அபுதாபியின் அல் வத்பாவில் உள்ள ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவலில் நடக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வான வேடிக்கை 35 நிமிடங்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் வத்பாவில், மிகப்பெரிய நேர்கோட்டில் நடைபெறவிருக்கும் (largest straight line fireworks display) இந்த நிகழ்வானது உலகின் முதல் ‘ஜிராண்டோலா’ (Girandola) வான வேடிக்கை நிகழ்ச்சியாக கூறப்படுகிறது. அதேபோல், ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் டிசம்பர் 31 ம் தேதி மதியம் 3 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபெஸ்டிவல் ஆனது மூன்று மாத கலாச்சார விழாவாக கடந்த நவம்பர் 20 அன்று துவங்கபட்டது. பிப்ரவரி 20, 2021 வரை நடைபெறும் இந்த விழாவில் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இந்த விழா பார்வையாளர்களை உலகெங்கிலும் உள்ள கலாச்சார அதிசயங்களை ஒரே இடத்தில் காண்பிக்கின்றது.
சமீபத்தில் உலகின் மிக முக்கியமான ஐந்து கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!