அமீரக செய்திகள்

அபுதாபியில் அதிகரிக்கும் சட்டவிரோத ‘பார்ட்டிசன் ரூம்’ கலாச்சாரம்.. ஹவுசிங் யூனிட்களில் அதிரடி சோதனையில் இறங்கிய முனிசிபாலிட்டி அதிகாரிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முறையான அனுமதி மற்றும் உரிமம் இன்றி வீடுகள், மற்றும் வெளிப்புற கட்டுமானங்கள் போன்றவற்றை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமாகும். எனவே, அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி அதிகாரிகள் அபுதாபி சிட்டிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் இவ்வாறு விதிகளை மீறி இடத்தை ஆக்கிரமித்துள்ள நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களை குறிவைத்து ஐந்து நாட்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அபிதாபி எமிரேட்டில் கூட்ட நெரிசல் என்பது கடுமையான விதிமீறலாகக் கருதப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் 8 ஆம் எண் சட்டத்தின்படி, ஒரு குடியிருப்பு இடம் அதன் பரப்பளவு மற்றும் வழங்கப்பட்ட வசதிகளின் விகிதாசாரத்திற்கு மீறிய அளவில் ஆக்கிரமிக்கப்பட்டால், அது கூட்ட நெரிசலாகக் கருதப்படுகிறது, அத்துடன் இதற்கு 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

எனவே, முனிசிபாலிட்டி அதிகாரிகள், மக்கள் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக குடியிருப்புகள் மற்றும் கட்டிட அடையாளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதிலும் அதிகாரிகள் ஹவுசிங் யூனிட்களில் உரிமம் பெறாமல் சீரற்ற கட்டுமானங்களை (பார்ட்டிசன் ரூம்) இலக்கு வைத்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அங்கு முனிசிபாலிட்டியிடம் முறையாக உரிமம் பெறாத வாடகைக்கு விடப்பட்ட சிறிய அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இத்தகைய கட்டுமானங்கள் அபுதாபி எமிரேட்டின் அழகியல் தோற்றத்தைக் கெடுப்பது, சுற்றுப்புறங்களை சிதைப்பது முதல் நியாயமற்ற மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவது வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும், அமீரகக் குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், தீவிர கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அபுதாபி முனிசிபாலிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இலாப நோக்கத்திற்காக விதிகளை மீறி வீடுகளை வாடகைக்கு விடுவது மற்றும் உரிமம் பெறாத சிறிய அளவிலான சீரற்ற பார்ட்டிசன் அறைகளை கட்டுவது போன்றவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஐந்து நாட்கள் இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!