அமீரக செய்திகள்

அமீரகத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் புதுமையான டெக்னிக்!! அசத்தும் ADNOC…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றானதும், உலகின் 12வது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமும் ஆகிய, அபுதாபி அரசாங்கத்திற்கு சொந்தமான அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (Abu Dhabi National Oil Company – Adnoc) தனிப்பயனாக்கப்பட்ட பிரத்யேக எரிபொருள் நிரப்பும் சேவையை அமீரகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது AI தொழில்நுட்பத்தின் மூலம் வாகனத்தை அடையாளம் கண்டு, வாடிக்கையாளர்களின் எரிபொருள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பெட்ரோல் நிரப்பும் சேவையை எளிதாக்க முடியும் என்று Adnoc கூறியுள்ளது.

Adnoc தனது Fill & Go எனும் இந்த சேவையை அறிமுகம் செய்வதன் மூலம், புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பிராந்தியத்தின் முதல் எரிபொருள் விநியோக நிறுவனமாக Adnoc நிறுவனம் மாறியுள்ளது. மேலும், கம்ப்யூட்டர் விஷன் டெக்னாலஜீஸ் (computer vision technologies) மூலம் எரிபொருள் நிலையத்திற்கு வரும் வாகனங்களை அடையாளம் காணவும், வாடிக்கையாளர்களுக்கு உயர்-தனிப்பட்ட எரிபொருள் அனுபவத்தை வழங்கவும் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Adnoc அறிமுகம் செய்துள்ள இந்த Fill & Go சேவை முதல் கட்டமாக தற்போது துபாயில் ஷேக் சயீத் சாலை, அபுதாபியில் உள்ள கார்னிச் சாலை மற்றும் அல் கலிதியா ஆகிய மூன்று இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் Adnoc நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து Adnoc Distribution-இன் CEO பதர் சயீத் அல் லம்கி (Badar Saeed Al Lamki) கூறுகையில், “Adnoc Fill & Go சேவையானது, அதிநவீன தொழில்நுட்பங்களை முழுமையாகப் புரட்சிகரமாக்குவதற்கும், எரிபொருள் வழங்கும் அனுபவத்தை விரைவுபடுத்துவதற்கும் பயன்படுவதாகவும்; எரிபொருள் வாடிக்கையாளர்களுக்கு பலனளிக்கும் திட்டங்களை உருவாக்கும்போது புதுமையான யோசனைகளை உயிர்ப்பிப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு இந்த வளர்ச்சி ஒரு சான்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, ஒருமுறை Adnoc Distribution செயலியில் வாகனம் பதிவு செய்யப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள் Adnoc எரிபொருள் நிலையத்திற்குள் நுழையலாம். அதன்பிறகு, அங்குள்ள ஸ்மார்ட் கேமராக்கள் தானாகவே வாகனத்தை அடையாளம் கண்டு,  வாடிக்கையாளரின் சேமிக்கப்பட்ட தரவு, விருப்பமான எரிபொருள் வகை மற்றும் செலவுத் தொகையின் அடிப்படையில் தானாகவே பம்பில் இருந்து எரிபொருள் நிரப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல, இது விரைவான மற்றும் மென்மையான எரிபொருள் நிரப்பும் அனுபவத்தை வழங்குவதாகவும், எரிபொருள் நிரப்புதல் முடிந்ததும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் திரை மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு Adnoc Oasis நிலையங்களில் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!