அமீரக செய்திகள்

நடைபாதை வியாபாரிகள், லைசென்ஸ் பெறாத வாகனங்களில் விற்கும் பொருட்களை வாங்க வேண்டாம்!! துபாய் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை..!!

துபாய் காவல்துறையானது சமீபத்தில் சுமார் 181 லைசன்ஸ் பெறாத நடைபாதை வியாபாரிகளை கைது செய்த நிலையில், சுகாதாரமற்ற காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்த வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. கடந்த மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கிய இந்த நடவடிக்கையானது ஏப்ரல் 25 வரை நடைபெற்றது என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடுருவல் தடுப்புத் துறையின் இயக்குநர் கர்னல் அலி சலேம் அல் ஷம்சி அவர்கள் பேசுகையில், துபாயில் பொதுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தவும், நகரின் தோற்றத்தை பராமரிக்கவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும், எதிர்மறையான சம்பவங்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமூக உறுப்பினர்கள் ஆர்வமும் ஈடுபாடும் காட்டினால், குறிப்பாக தொழிலாளர்கள் கூடும் பகுதிகளிலும் அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் என்று கர்னல் அலி சலீம் விளக்கியுள்ளார். மேலும், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை தெருவோர வியாபாரிகளிடமிருந்தோ அல்லது பொதுச் சாலைகளில் நிறுத்தப்படும் லைசன்ஸ் இல்லாத வண்டிகளிடம் இருந்தோ வாங்கக் கூடாது என்று பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, இதுபோன்ற லைசன்ஸ் இல்லாத நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து வாங்கப்படும் பொருட்களில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்றவை குறைவாக இருக்கலாம், இது நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை விளைவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, துபாய் காவல் துறை அதன் கூட்டாளர்களுடன் இணைந்து 24 மணி நேரமும் இந்த விதியை மீறுபவர்களைக் கைது செய்து அனைத்து இடங்களிலும் நன்கு திட்டமிடப்பட்ட, மற்றும் தொடர்ச்சியான பிரச்சாரங்களை நடத்துகிறது என்று கட்டுப்பாட்டுத் துறையின் தலைவரான மேஜர் ஜாசிம் முகமது அல் துஹைல் கூறியுள்ளார்.

அதேசமயம், லைசன்ஸ் இல்லாத வாகனங்களில் விற்கப்படும் பொருட்கள், குறிப்பாக உணவுப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான மீறல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!