அமீரக செய்திகள்

அமீரகம்: பாதசாரிகள் இந்த விதியை மீறினால் 400 திர்ஹம்ஸ் அபராதம்.. எச்சரிக்கும் காவல்துறை..

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு புதிய பிரச்சாரத்தை ஃபுஜைரா காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்துகள், உயிரிழப்பு, சிறிய மற்றும் பெரிய காயங்கள் போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, ‘I have the right to cross safely’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின் நோக்கம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பிரச்சாரத்தில் சாலைகளில் மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கவும், பாதசாரிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை விதிகளை பின்பற்றுவது மற்றும் பாதசாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவது பற்றி சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவையும் இந்த பிரச்சாரத்தில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் கர்னல் சலேஹ் முஹம்மது அப்துல்லா அல்-தன்ஹானி, பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளார். அதே போன்று லெப்டினன்ட் மொசா அப்துல்சலாம் அல் தர்மாகியும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

ஃபுஜைரா காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ட்ராஃபிக் சிக்னல்களை கடைபிடிக்காத பாதசாரிகளுக்கு 400 திர்ஹம்கள் அபராதமும், அதேசமயம் சாலைகளில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்காத வாகன ஓட்டிகளுக்கு அபராதமாக 500 திர்ஹம்களும் 6 கருப்புப் புள்ளிகளும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!