அமீரக செய்திகள்

முழுவீச்சில் தயாராகும் துபாய் ஏர்போர்ட்.. இன்னும் 24 மணி நேரத்திற்குள் இயல்பு நிலைக்கு திரும்பும் என CEO அறிவிப்பு..!!

அமீரகத்தில் இரண்டு நாட்கள் நீடித்த கனமழையால் விமான நிலையச் செயல்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், துபாய் விமான நிலையங்கள் இன்னும் 24 மணி நேரத்திற்குள் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பும் என்று அதன் CEO மஜித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய அவர், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3 இல் இன்று காலை முதல் செயல்பாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், விமான இயக்கங்கள் மிகவும் நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்..

அத்துடன், இரண்டு நாட்களாக அமீரகத்தைத் தாக்கிய மோசமான வானிலையைத் தொடர்ந்து 1000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிப்புக்குள்ளான எங்கள் பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் விரைந்து செயல்பட்டு வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துபாய் விமான நிலையத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க அவசரகால குழுக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமாக வேலை செய்ததாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இதற்கிடையில், தற்போதையை இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பயணம் உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பயணம் ரத்து செய்யப்பட்ட பயணிகள் தங்களின் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பயணத்தை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!