அமீரக செய்திகள்

UAE: வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் மாற்றம் ஏதும் இல்லை.. வழக்கமான நேரத்திலேயே நடைபெறும்.. ஷார்ஜா அரசு அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 2022 ஜனவரி 1 ம் தேதி முதல் புதிய வார வேலை நாட்கள் அமலுக்கு வர இருப்பதால் அமீரகம் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்புத்தொழுகை மதியம் 1.15 மணிக்குப் பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஷார்ஜாவில் உள்ள மசூதிகள் ஹிஜ்ரி நாட்காட்டியின்படி நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான நேரத்தில் தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை தொடர்ந்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் உள்ள இஸ்லாமிய விவகாரத் துறை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஷார்ஜாவில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் தாமதம் ஏற்படாது என்றும், வழிபாட்டாளர்கள் அனைத்து கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதிலும் புதிய வார விடுமுறையானது இரண்டரை நாட்களாக அதாவது வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழுநாள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஷார்ஜா அரசானது வெள்ளிகிழமையும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் மாற்றம் இல்லாமல் வழக்கமான நேர அடிப்படையிலேயே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மற்ற எமிரேட்களில் வெள்ளிக்கிழமை மட்டும் அரைநாள் விடுமுறை என்பதால் 12 மணிக்கு வேலை முடிந்து அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் கலந்துகொள்ளும் விதமாக வழக்கமான நேரத்தை விட்டு 1.15 மணிக்குப் பிறகு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கான விடுமுறை நாள் எப்போது என்று உறுதியாக தெரியாமலும், இது பற்றிய தெளிவான அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பிலும் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!