அமீரக செய்திகள்

UAE: வெறும் 3 திர்ஹமில் ஒரு வேளை உணவு.. தொழிலாளர்களுக்காக வீட்டை விற்று உணவகம் அமைத்த இந்தியப் பெண்..!!

மக்கள் சொந்த ஊரில் தன் குடும்பத்தின் தேவையை தீர்க்க வெளிநாடுகளுக்கு வந்து பணிபுரிகிறார்கள். வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தை வைத்து தங்களது கனவை செயல்படுத்திக் கொள்கிறார்கள்.

அது போல, வெளிநாடுகளில் உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து தனது ஊரில் வீடு கட்டுபவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அமீரகத்தில் அரசுப் பணியில் பணிபுரிந்த இவர் தொழிலாளர்களின் பசியைப் போக்க இந்தியாவில் உள்ள வீட்டை விற்று விட்டு அமீரகத்தில் உணவகத்தைத் திறந்துள்ளார். ஆச்சரியம்தான்..!!

அமீரகத்தில் அரசுப் பணியில் கம்ப்யூட்டர் இன்ஜினீராக தனது பணியினை தொடங்கிய இந்தியாவைச் சேர்ந்த 45 வயதான ஆயிஷா கான், தனது உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தின் விளைவாக அந்த பணியினை விட்டு விட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அஜ்மானில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான ஃபுட்-ஏடிஎம் (food ATM) ஒன்றை நிறுவியுள்ளார்.

அவர் தனது நிறுவனத்தில் ஒரு வேளை உணவு வாங்குவதற்கு வெறும் 3 திர்ஹம் மட்டுமே செலவாகும் என கூறியுள்ளார். ஆயிஷாவின் கூற்றுப்படி, ஒரு நாளுக்கான மூன்று வேளை உணவையும் வெறும் 9 திர்ஹத்தில் பெற முடியும்.

மேலும் அவர் ஒவ்வொரு நாளும் துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மானில் வசிக்கும் 2,600 பேருக்கு பார்சல்களை வழங்குகிறார். 17 ஊழியர்களைக் கொண்ட அவரது குழு, கடின உழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம், ஆயிஷா ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவையும் வழங்குகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அஜ்மானில் உள்ள எங்கள் நிறுவனத்தில் 24 மணி நேரமும் உணவு மற்றும் தண்ணீர் உள்ளது. அதிகாலை 2 அல்லது 3 மணிக்கு கூட நீங்கள் எங்களிடம் உணவு மற்றும் தண்ணீரைப் பெறலாம். அஜ்மானில் இருக்கும் எங்கள் சிறிய உணவு நிறுவனத்தில் உணவு ‘இல்லை’ என்பதற்கே இடமில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிறுவனமானது மார்ச் 2019 இல் தொடங்கப்பட்டதாகும். ஃபுட் ATM என்பது ஆயிஷாவால் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் உணவளிக்க தொடங்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.

“பொதுவாக, ஒரு தொழிலாளி தடிமனான ‘ரொட்டி’ (இந்திய ரொட்டி), ‘தால்’ அல்லது கோழி குழம்புக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 திர்ஹம் செலுத்துகிறார். ஆனால் எங்கள் ஃபுட் ATM-ல் உள்ள பேக் செய்யப்பட்ட உணவுப் பாக்கெட்டில் பிரியாணி, ஒரு கப் தயிர், ஊறுகாய் மற்றும் ஒரு சிறிய கப் இனிப்பு ஆகிய அனைத்திற்கும் 3 திர்ஹம் மட்டுமே ஆகும்” என்று ஆயிஷா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய, பாகிஸ்தானிய, நேபாளி மற்றும் பிற தெற்காசிய தொழிலாளர்களின் சுவைக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் எட்டு வெவ்வேறு மெனுக்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

“எங்கள் முயற்சியை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அனைவரும் பயனடைவதற்கு ஏற்ப உருவாக்கியுள்ளோம்”என்று ஆயிஷா கூறியுள்ளார்.

குறிப்பாக மலபாரிஸ் என்ற ஒரு தென்னிந்திய உணவு மெனு உள்ளது. இதில் மீன் வறுவல், பிரியாணி, கீமா, ஆலு மட்டர், பருப்பு குழம்புடன் சோறு மற்றும் பல அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா தொடர்ந்து கூறுகையில், நாங்கள் ஏழு நாட்களுக்கு ஏழு இனிப்புகளை தயார் செய்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

உணவகம் எப்படி தொடங்கியது..??

ஆயிஷா துபாய் மற்றும் அஜ்மானில் ஒரு அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தார். “நான் பணிபுரிந்த காலத்தில், ​​எனது அலுவலகத்தில் சில தொழிலாளர்களுடன் எனது உணவைப் பகிர்ந்துகொள்வது வழக்கம். அப்போது ஒரு நாள், ஒரு தொழிலாளி என்னிடம் வந்து, தனது குழந்தை பள்ளியில் படிக்கும் படத்தைக் காட்டினார். எனது உதவிக்கு நன்றி தெரிவித்து, அவர் உணவுக்கான பணத்தை மிச்சப்படுத்தி தனது குழந்தையின் கல்விக்காக வீட்டிற்கு அனுப்ப முடிந்தது என்றார். அவர் அவ்வாறு கூறியதும் அவரைப் போல் இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள் என சிந்திக்க தூண்டியது” என்றார் ஆயிஷா.

அதனைத் தொடர்ந்து ஆயிஷா தனது அலுவலகம் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். “ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 சதவிகித மக்கள் ப்ளூ காலர் தொழிலாளர்கள் என தெரியவந்தது. அவர்களில் பெரும்பாலோர் உணவகத்திலிருந்து வரும் உணவை வாங்குவதற்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருந்ததால் மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறினர். தொழிலாளர்களிடமிருந்து இதைக் கேட்டறிந்த பின்னர் எனக்கு தோன்றிய திட்டம்தான் இந்த உணவகம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை செயல்படுத்த அவர் பணிபுரிந்து வந்த ஒரு துபாய் அரசாங்க நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு தன் கனவைப் பின்பற்ற முடிவு செய்தார். அரசு வேலையில் மரியாதைக்குரிய ஊழியராக இருந்து, தனது வேலையை நேசித்து துபாயில் உயர்மட்ட சமூகம் வசித்த பகுதியில் தங்கி வந்த ஆயிஷாவின் வாழ்க்கை அப்படியே மாறியது.

அவர் மும்பையில் உள்ள தனது வீட்டை விற்று, அந்த பணத்தை வைத்து முதலீடு செய்து தனது கனவுத் திட்டமான உணவகத்தைத் தொடங்கியுள்ளார்.

நிறுவனத்தை அமைக்க ஆரம்ப முதலீடு மிகவும் கடினமாக இருந்தது எனக் கூறிய அவர், வணிக உரிமம் பெறுதல், உணவகத்தை ஏற்பாடு செய்தல், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குதல் ஆகியவற்றிற்கு 450,000 திர்ஹம் செலவாகியது என அவர் கூறியுள்ளார்.

உணவகம் எவ்வாறு செயல்படுகிறது..??

உணவகத்தில் வழங்கப்படும் கார்டில் ரீசார்ஜ் செய்து கொண்டால் அந்த மாதம் முழுவதும் உணவைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த கார்டில் ஒரு எண், தனிநபரின் புகைப்படம் மற்றும் ஒரு QR குறியீடு உள்ளது. இது உணவு எண்ணிக்கை இருப்புக்காக ஸ்கேன் செய்யப்படுகிறது.

“வழக்கமாக, இந்த தொழிலாளர்கள் மாதத்தின் தொடக்கத்தில் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதால் பணம் இல்லாமல் போகும். பின்னர், மீதமுள்ள நாட்களில், அவர்கள் உணவு மற்றும் பிற அன்றாட தேவைகளுக்கு பணம் செலுத்த சிரமப்படுகிறார்கள். எங்கள் உணவகத்தில் வழ்ங்கப்படும் கார்டின் மூலம் மாதம் முழுவதும் அவர்களின் உணவை பெறுவதை உறுதி செய்கிறது.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது, ​​உணவுக்கான தேவை பெரும்பாலும் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களிலிருந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிஷா சமீபத்தில், துபாயில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 3 திர்ஹம் உணவு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 2,500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு அளிக்ககூடிய கூடிய ஃபுட்-ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தன்னைப் பற்றி யோசிக்காது தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் நன்றாக இருக்க வேண்டுமென கருதி எடுத்த ஆயிஷாவின் இந்த முடிவு மென்மேலும் வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!