அமீரக செய்திகள்

1.3 மில்லியனுக்கும் மேலான தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ள அபுதாபி..!! 2.93 லட்சம் பேர் நாடு திரும்பவும் உதவி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரையிலும் 293,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அபுதாபியிலிருந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அபுதாபியை சேர்ந்த அதிகாரிகள் உதவி புரிந்துள்ளதாக அமீரக செய்தி நிறுவனம் (WAM) செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்கள் தங்களின் அனைத்து நிலுவை தொகையையும் பெற்று விட்டார்களா என்பதையும், கொரோனா தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் என்பதையும் உறுதிசெய்த பிறகே அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மட்டும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் அபுதாபியின் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (Abu Dhabi Emergency, Crisis & Disasters Committee) வழங்கப்பட்ட உதவிகளால் பயனடைந்துள்ளனர் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் வளாகங்கள் மற்றும் தொழில்துறை நகரங்களில் வசிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கோவிட் -19 பரிசோதனைகள் செலவுகளை ஏற்றது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கியது, தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளையும் எளிதாக்குவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது, மற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை வழங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை ஈடுகட்ட மூன்றாம் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவையும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வணிகத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகளால் நிறுவனங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மதிப்பிடுவதற்கும் மேலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தேவைகள் மற்றும் கடமைகள் குறித்து விவாதிக்கவும், பொருளாதார மேம்பாட்டுத் துறையால் (Department of Economic Development) அமைக்கப்பட்ட குழுக்களின் மூலமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமீரக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!