அமீரக செய்திகள்

ஷார்ஜா: 1,000 க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்கள் கட்டண பார்க்கிங்காக மாற்றம்..!! முனிசிபாலிட்டி அறிவிப்பு..!!

ஷார்ஜாவில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்கள் 2022 முதல் காலாண்டில் கட்டண வாகன நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான வழிகாட்டுதல் மற்றும் புதிதாக மாற்றப்பட்டுள்ள கட்டண பார்க்கிங் பகுதிகளில் அதற்கான அடையாளங்கள் வழங்கப்பட்ட பின்னர், அந்த பகுதி பணம் செலுத்தும் கட்டண பார்க்கிங் பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக ஷார்ஜா முனிசிபாலிட்டி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்களில், தொடு தொழில்நுட்பத்தில் செயல்படும் ஸ்மார்ட் பேமெண்ட் மீட்டர்கள் மற்றும் SMS மூலம் பணம் செலுத்தும் முறையும் பொருத்தப்பட்டுள்ளதாக முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

இது பற்றி ஷார்ஜா முனிசிபாலிட்டியின் பொது பார்க்கிங் துறையின் இயக்குனர் ஹமத் அல் கெய்த் கூறுகையில், “ஷார்ஜாவில் மொத்த கட்டண வாகன நிறுத்துமிடங்கள் தற்போது 55,300 ஆக அதிகரித்துள்ளது. இவை 1,210 ஸ்மார்ட் மீட்டர்களைக் கொண்டுள்ளன.

அத்துடன் முனிசிபாலிட்டி இதுவரை 270 பார்க்கிங் யார்டுகளை வழங்கியுள்ளது. அதில் 18,033 பார்க்கிங் இடங்கள் உள்ளன. மேலும் மணல் நிறைந்த பகுதிகள் மற்றும் திறந்தவெளி இடங்களில் அப்பகுதிகளை வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்துவதற்கும் எதிராக நகராட்சி ஒரு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது” என்று அல் கைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கூறுகையில் “நகரத்தின் அழகியல் தோற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல பகுதிகளை முனிசிபாலிட்டி மூடியுள்ளது. அதே நேரத்தில் எமிரேட்டின் ஒவ்வொரு பகுதியிலும் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டும் வருகிறது” என கூறியுள்ளார்.

மேலும் போதிய வாகன நிறுத்துமிடங்கள் கிடைப்பதை உறுதிசெய்த பின்னரும், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மூன்று நாட்களுக்கு விநியோகித்த பின்னருமே இந்த வாகன நிறுத்துமிடங்களை மூடுவது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் அதற்கு முன்னதாக எந்த வாகன நிறுத்துமிடமும் மூடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!