ADVERTISEMENT

அமீரக சட்டம்: தனக்கு சொந்தமில்லாத பொருளை வைத்திருக்கும் நபருக்கு 20,000 திர்ஹம் அபராதம், 2 வருட சிறை தண்டனை..!!

Published: 25 Sep 2022, 6:06 AM |
Updated: 25 Sep 2022, 8:46 AM |
Posted By: admin

அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத பொருளையோ, சொத்தையோ கண்டறிந்து, அதை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் வைத்திருந்தால், அவர்கள் மீது அமீ்ரக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 31 இன் 454 வது பிரிவின்படி இந்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு 20,000 திர்ஹமிற்கு குறையாத அபராதம் அல்லது இரண்டு வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அமீரக பொது வழக்கு துறை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

மேலும் சட்டத்தின்படி, தொலைந்த பணம் அல்லது பொருட்கள் அல்லது கைவிடப்பட்ட சொத்தை கண்டறிபவர் 48 மணி நேரத்திற்குள் காவல்துறையிடம் அத்தகைய பொருட்கள் அல்லது சொத்துக்களை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளார் என்றும் அவற்றின் மீது உரிமை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனை மீறுபவர் குற்றவியல் பொறுப்புக்கு உட்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேற்கூறியதன் படி தனக்குக் கிடைத்த தொலைந்த பொருட்களை கையகப்படுத்தும் நபர் குற்றங்கள் மற்றும் தண்டனை சட்டத்திற்கு உட்பட்டவர் என்றும் இதனை தவிர்க்க காவல்துறையிடம் அதனை ஒப்படைக்குமாறும் பொது வழக்கு துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.