அமீரக செய்திகள்

பாலைவன மணலில் புதைந்து கிடக்கும் கிராமம்.!! மீட்டெடுக்க உத்தரவிட்ட ஷார்ஜா ஆட்சியாளர்.!! அமானுஷ்யங்கள் இருப்பதாக கிசுகிசுக்கப்படும் கதைகள்…

ஷார்ஜாவில் உள்ள அல் மடம் பாலைவனத்தில் பாதிக்கு மேல் புதைந்து கிடக்கும் ஷார்ஜாவின் ‘புதைக்கப்பட்ட கிராமம்’ மணலில் இருந்து மீட்டெடுக்கப்பட இருப்பதாக வானொலி நிகழ்ச்சி ஒன்றில் நடந்த உரையாடலின் போது அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் உத்தரவின் படி, அல் மடத்தில் உள்ள இந்த புகழ்பெற்ற ‘புதைக்கப்பட்ட கிராமம்’ பாதுகாப்பாக மணலில் இருந்து மீட்டெடுக்கப்பட உள்ளது.

பின்னர் அதனை தொடர்ந்து இந்த கிராமத்தை பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக தயார்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அல் மடம் பாலைவனத்தின் தென்மேற்கு திசையில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கைவிடப்பட்ட கிராமத்தில் இரண்டு வரிசைகளாக ஒரே மாதிரியான வீடுகளும் மற்றும் சாலையின் முடிவில் ஒரு மசூதியும் உள்ளது. இந்த கிராமத்திலுள்ள வீடுகள் அனைத்தும் பாதிக்கும் மேல் மணலுக்குள் புதைந்திருப்பதால் இதற்கு ‘புதைக்கப்பட்ட கிராமம்’ என்ற பெயரும் வந்தது.

மணலுக்குள் புதையுண்ட இந்த கிராமத்தைச் சுற்றி பல்வேறு அமானுஷ்ய கதைகள், பேய்கள் குறித்த கிசுகிசுக்கள் வலம் வருவதற்கு மத்தியில், ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாகச அனுபவத்திற்காக கிராமத்தை நோக்கி படையெடுக்கின்றனர். கொளுத்தும் வெயிலிலும் கூட, ஏராளமான பார்வையாளர்கள் கிராமத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய தனித்துவமான இடம் குறித்து அளிக்கப்பட்ட கூகுள் ரிவியூவில், ஒரு பார்வையாளர், அற்புதமான புகைப்படங்கள் எடுக்க சூரிய அஸ்தமனத்திற்குள் அந்த இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு பதிவிட்ட மற்றொரு பார்வையாளர், அந்த இடத்தில் அமானுஷ்யமான மற்றும் பயமுறுத்தும் எதுவும் இல்லை, எனவே, பார்வையாளர்கள் “light off-roading” செல்ல சிறந்த இடமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமம் கைவிடப்பட்டது ஏன்?

அந்த கிராமத்தில் வசித்த முன்னாள் குடியிருப்பாளர் ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் படி, ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த கிராமத்தில் மக்கள் வசித்து வந்த போது, 1999 ஆம் ஆண்டு அரசாங்கம் அவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கியதால், ஒவ்வொருவராக கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

மேலும், கிராமத்தில் வசித்த நினைவுகளை பெருமையுடன் பகிர்ந்து கொண்ட அந்த குடியிருப்பாளர், 1970 களின் பிற்பகுதியில் கட்டுமானம் தொடங்கியதாகவும், பின்னர் 1980 களில் அந்த கிராமத்தில் வாழ்ந்த போது, வீடுகள் மணலில் இருந்து உயரத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், சில வருடங்கள் உருண்டோடிய போது மணலின் அளவு அதிகரித்து, பெரிய பகுதிகளை மூடியதாகக் கூறியுள்ளார். இருப்பினும்கூட, அது கிராமத்தில் உள்ள வீடுகளை முழுவதுமாக மூடவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் எப்போது தொடங்கும் அல்லது எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!