அமீரக செய்திகள்

சுற்றுலா விசாவில் அமீரகம் பயணிப்பவர்கள் “ICA வருகை பதிவில்” பதிவு செய்வது எப்படி..??

வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா அல்லது விசிட் விசாவில் பயணிகள் அமீரகத்திற்கு வர தடை செய்யப்பட்டிருந்த நிலையில், நாளை ஆகஸ்ட் 30, 2021 முதல் அனைத்து நாடுகளிலிருந்தும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு சுற்றுலா விசா சேவையை மீண்டும் தொடங்குவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) நேற்று சனிக்கிழமை ஆகஸ்ட் 28 ம் தேதி அறிவித்திருந்தது.

கூடுதலாக, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை ICA வலைத்தளம் அல்லது அல் ஹோஸ்ன் ஆப்பில் பதிவு செய்வதன் மூலம் தடுப்பூசி போட்டவர்களுக்கான சிறப்புகளை சுற்றுலா விசாவில் வருபவர்களும் பெற முடியும் எனவும் ICA தெரிவித்திருந்தது.

தற்போது அமீரகத்தில் குறிப்பிட்ட சில நிகழ்வுகளுக்கு மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி முதல் அனைத்து பொழுதுபோக்கு தளங்களுக்கும், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பொது இடங்களுக்கும் கிரீன் பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கவிருக்கும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன்பாக அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) வலைதளத்தின் வருகை பதிவில் தங்களின் பயணம் குறித்த தகவல்களை எவ்வாறு நிரப்புவது மற்றும் தங்கள் நாடுகளில் போட்டுக்கொண்ட தடுப்பூசி சான்றிதழ்களை எப்படி பதிவேற்றுவது போன்ற தெளிவான வழிமுறையை கீழே காணலாம்.

படி 1: பயணம் செய்ய விண்ணப்பிப்பவரின் தகவலை நிரப்பவும்

அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகள் குறித்த தகவலில் பயணியின் குடியுரிமை கொண்ட நாடு, பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், மற்றும் விண்ணப்பிக்கும் பயணியின் மின்னஞ்சல், மொபைல் எண் போன்ற விபரங்களை நிரப்ப வேண்டும்.

பயணிகளின் தகவல்கள் நிரப்பப்பட்டவுடன் அதில் குறிப்பிடப்பட்ட மின்னஞ்சலுக்கு ஒரு QR குறியீடு அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலில் பயணியால் உள்ளிடப்பட்ட தகவல்கள் சரியானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

படி 2: பாஸ்போர்ட் தகவலை நிரப்பவும்

இதில் பயணிகள் தங்களின் பாஸ்போர்ட் வகை, பாஸ்போர்ட் காலாவதி தேதி, பாஸ்போர்ட் வழங்கப்பட்ட தேதி, பாஸ்போர்ட் எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

படி 3: அமீரகம் வந்திறங்கும் தகவலை நிரப்பவும்

அமீரகத்தை வந்தடையும் தேதி, வந்திறங்கும் விமான நிலையம் மற்றும் பயணிகள் புறப்படும் நாடு உள்ளிட்ட தகவல்களை இங்கு நிரப்ப வேண்டும்.

படி 4: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முகவரியை நிரப்பவும்

அமீரகம் வரவிருக்கும் பயணிகள் அமீரகத்தில் வசிக்க போகும் எமிரேட் பெயர் மற்றும் தெளிவான முகவரியை நிரப்ப வேண்டும்.

படி 5: தடுப்பூசி மற்றும் PCR சோதனை தேதிகளை நிரப்பவும்

இந்த படிவத்தில் பயணிகள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாடு மற்றும் தடுப்பூசியை தேர்வு செய்ய வேண்டும். இதில் தடுப்பூசியை தேர்வு செய்து கொள்ளும் விதமாக எட்டு தடுப்பூசிகளின் பட்டியலை ICA வழங்கியுள்ளது.

(அவை:- ஸ்புட்னிக் V (Sputnik V), ஜான்சன் (ஜான்சன்   அண்ட் ஜான்சன்) Janssen (Johnson and Johnson), மாடர்னா (Moderna), நோவாவாக்ஸ் (Novavax), ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா (OxfordUni AstraZeneca), ஃபைசர் பயோஎன்டெக் (PfizerBioNTech), சினோஃபார்ம் (Sinopharm) மற்றும் சினோவாக் (கொரோனாவாக்) Sinovac (CoronaVac) ஆகியவை ஆகும்). இதில் ஆக்ஸ்போர்டுனி அஸ்ட்ராஜெனேகா இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.

தடுப்பூசியை தேர்வு செய்தவுடன் பயணிகள் தங்களின் முதல் மற்றும் இரண்டாவது டோஸை பெற்ற தேதிகளை நிரப்ப வேண்டும். (மூன்றாவது டோஸை பெற்றிருந்தால் அவர்கள் அதனையும் குறிப்பிடலாம்.)

அதற்கு பின்னர், பயணத்திற்கு முன்பு பெறப்பட்ட PCR சோதனை மேற்கொள்ளப்பட்ட தேதி மற்றும் சோதனை முடிவு வெளியாகிய தேதி ஆகிய தகவல்களை குறிப்பிட வேண்டும்.

படி 6: பயணத்திற்கான ஆவணங்களைப் பதிவேற்றவும்

விண்ணப்பிக்கும் பயணியின் அனைத்து தகவல்களும் நிரப்பப்பட்டவுடன் அப்பயணியின் பாஸ்போர்ட் நகல் மற்றும் பயணியின் போட்டோவை கட்டாயம் பதிவேற்ற வேண்டும். (இதில் PCR சோதனை முடிவுகளின் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை விருப்பப்பட்டால் பதிவேற்றிக்கொள்ளலாம்.)

படி 7: நிரப்பப்பட்ட தகவல்கள் சரியானவையா என்பதை பிரகடனம் செய்யவும்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் வெளியிட்டிருந்த சட்டங்களை முழுமையாக கடைபிடிப்பது மற்றும் பயண அனுமதிக்கு இணைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரியானவை என்பதை உறுதிப்படுத்த இதில் கிளிக் செய்யவும். பின்னர் இறுதியாக Send எனும் பட்டனை அழுத்தவும்.

இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பயணிக்கவிருக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலா பயணிகள் https://smartservices.ica.gov.ae/ எனும் இந்த லிங்கில் சென்று மேற்கூறியவாறு தங்களின் பயண ஆவணங்கள் மற்றும் தகவல்களை குறிப்பிடுவதன் மூலம் அமீரகம் பயணிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!