அமீரக செய்திகள்

UAE: போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடியை அறிவித்த நான்காவது எமிரேட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அபராதத்தில் ஏற்கெனவே 50 சதவீத தள்ளுபடியை மூன்று எமிரேட்டுகள் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது அதில் நான்காவது எமிரேட்டாக ஷார்ஜா இணைந்துள்ளது.

அதன்படி டிசம்பர் 1, 2022 முதல் ஜனவரி 20, 2023 வரை ஷார்ஜாவில் வாகன ஓட்டிகள் இந்த அபராத தள்ளுபடியை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 1, 2022 க்கு முன் செய்யப்பட்ட மீறல்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தினத்தை கொண்டாடும் ஷார்ஜா நிர்வாகக் குழுவின் முடிவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஷார்ஜா காவல்துறையின் கமாண்டர்-இன்-சீஃப் மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சி கூறுகையில், இந்த முடிவை சரியான நேரத்தில் செயல்படுத்த காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடுமையான விதி மீறல்களைத் தவிர, டிசம்பர் 1, 2022 க்கு முன் செய்யப்பட்ட அனைத்து போக்குவரத்து மீறல்களுக்கும் இந்த தள்ளுபடி வழங்கப்படும் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது. குடியிருப்பாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கவும், சமூக உறுப்பினர்களின் நிதிச் சுமைகளைத் தணிப்பதில் கவனம் செலுத்தவும், அவர்களின் சட்டச் சூழலைத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்கவும் ஷார்ஜா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற அபராதங்கள் தனிநபர்கள் மீதான நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்து வாகன ஓட்டிகள் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் ஃபுஜைரா, உம் அல் குவைன் மற்றும் அஜ்மான் ஆகிய மூன்று எமிரேட்டுகளும் போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button
error: Content is protected !!