வளைகுடா செய்திகள்

பஹ்ரைன் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு இலவச சிட்டி டூர்.. முன்பதிவு செய்தால் மட்டும் போதும்..!!

பஹ்ரைன் விமான நிலையம் வழியாக, இனி நீங்கள் வேறு ஏதேனும் நாடுகளுக்கு செல்ல நேரிட்டால் பஹ்ரைனில் உள்ள முக்கியமான இடங்களை கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக உங்களால் சுற்றிப் பார்க்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆம், உண்மைதான்.

பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் (BIA) வழியாகப் பயணிக்கும் போக்குவரத்துப் பயணிகள், தங்களுடைய இணைப்பு விமானங்களுக்காகக் காத்திருக்கும் போது, ​​ நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டு களிக்கும் வாய்ப்பை பெற முடியும் என Gulf Air, Bahrain Airport Company மற்றும் Bahrain Tourism and Exhibitions Authority (BTEA) இணைந்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஜூலை 5 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த வசதியினை பயன்படுத்தி பஹ்ரைனின் முக்கிய இடங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சுற்றிப் பார்க்கலாம். பஹ்ரைனில் உள்ள கானூ டிராவல் மூலம் Gulf Air, BAC மற்றும் BTEA ஆகியவை இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன.

BTEA இன் CEO டாக்டர். நாசர் கெய்தி இது குறித்து கூறும் பொழுது, பஹ்ரைன் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு மேம்பட்ட சுற்றுலா அனுபவத்தினை வழங்கும் பொருட்டு இந்த இலவச சேவை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கூறுகையில், பஹ்ரைன் விமான நிலையத்தின் வழியே பயணிக்கும் பயணிகள், தங்கள் பயணத்தின் போது பஹ்ரைன் விமான நிலையத்தில் ஓய்வெடுக்கும் காலத்திற்கு ஏற்றவாறு விரிவான சுற்றுலாத் திட்டத்தைப் பெறுவார்கள் என்றார்.

இந்த திட்டம் அவர்களின் நேரத்தை மேம்படுத்துவதையும், பஹ்ரைனின் சுற்றுலாத் துறையின் நீடித்த நேர்மறையான பதிவுகளை அவர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பொழுதுபோக்கு விருப்பங்கள், பாரம்பரிய தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்கள் உட்பட பலவிதமான சலுகைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.

பஹ்ரைன் நாடானது வணிகம் மற்றும் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்து பல வெளிநாட்டினர் வேலை செய்யும் இடமாக உள்ளது. அது மட்டுமல்லாமல், கிழக்கு மற்றும் மேற்கு திசையில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாகவும் உள்ளது. பஹ்ரைன் விமான நிலையம் வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்தாலும் நாட்டை சுற்றி பார்க்கும் வாய்ப்பு இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை.

எனவே, இந்த புதிய சேவையின் அறிமுகம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, பஹ்ரைன் நாட்டின் குறிப்பிடத்தக்க இடங்களைப் பற்றிய சிறந்த புரிதலையும் பார்வையாளர்களுக்கு வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கல்ஃப் ஏர் குரூப் ஹோல்டிங் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த இலவச சுற்றுப்பயணம், காலை 9-12 மணி மற்றும் இரவு 7-10 மணி வரை என மூன்று மணி நேரம் தினமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் இந்த இலவச சுற்றுலாவிற்கான ஆஃபரைப் பதிவுசெய்ய அல்லது மேலும் அறிய, Gulf Air, BIA மற்றும் Bahrain Tourism & Exhibitions Authority இணையதளங்கள் வழியாக Hello Bahrain Free City Tour பக்கங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!