அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று கடுமையான தூசிப்புயல் நிலவும்..!! எச்சரிக்கை விடுத்த தேசிய வானிலை மையம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடுமையான தூசிப்புயல் தாக்க வாய்ப்புள்ளதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அனிமேஷன் வீடியோவில் சவூதி அரேபியாவில் இருந்து அமீரகத்தின் மேற்கு பகுதிக்கு இந்த தூசிப்புயல் நகர்வதாக காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஓமன் கடல் மீது உருவாகும் மற்றொரு புயல் ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கடற்கரையைத் தாக்கக்கூடும் என்றும், ஆனால் பெரும்பாலான தூசுகள் கடலில் குடியேறும் என்பதால் நிலப்பகுதியில் அதன் விளைவு குறைவாக இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், அமீரகம் முழுவதும் 40kmph வேகத்தில் வீசிய காற்று, சில பகுதிகளில் 500 மீட்டருக்கும் குறைவான தெரிவுநிலையை (visibility) கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரமும் அமீரகத்தில் தூசிப்புயல் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கு நாடுகளில் அவ்வப்போது கடும் தூசிப்புயல் உருவாகி வருகிறது. நேற்று குவைத் மற்றும் ஈராக் ஆகிய இரண்டு  நாடுகளின் விமானப் பணிகள் தூசிப்புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடர்த்தியான ஆரஞ்சு நிறத்தால் குவைத் சூழப்பட்டதைக் காட்டுகின்றன. அதே சமயம் ஈராக்கில் வீட்டில் இருந்து மக்கள் வெளியேறாமல் இருந்ததால் தெருக்கள் வெறிச்சோடி கிடந்த வீடியோக்களும் பகிரப்பட்டது.

NCM இன் ஐந்து நாள் வானிலை முன்னறிவிப்பின்படி, மே 27 வெள்ளிக்கிழமை வரை தூசி நிறைந்த சூழல் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் வீசிய புழுதிப் புயல் துபாயில் விமானப் போக்குவரத்தை பாதிக்கவில்லை. புயல் இந்த வாரமும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நடவடிக்கைகளை பாதிக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், குவைத்தில் நேற்று வீசிய கடுமையான தூசிப்புயலால் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அதன் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதே போல் சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் தூசி புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தை நேற்று மாபெரும் தூசிப்புயல் தாக்கிய போது எடுத்த புகைப்படம்

 

Related Articles

Back to top button
error: Content is protected !!