வளைகுடா செய்திகள்

கொரோனா வைரஸ் : சவூதி அரேபியாவில் வாகனங்களுக்கான தானியங்கி சுத்திகரிப்பு வாயில் அறிமுகம்..!!

கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவில் உள்ள கிழக்கு மாகாண பகுதியில் இருக்கும் ஒரு தெருவில் வாகனங்களுக்கான தானியங்கி சுத்திகரிப்பு வாயில் (automated sterilization gate) நிறுவப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி சுத்திகரிப்பு வாயிலானது, அந்த வழியாக செல்லும் வாகனத்தை தானாகவே சுத்திகரிப்பு செய்கிறது. இது ஐந்து மீட்டர் உயரமும் ஏழு மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் 600 லிட்டர் சேமிப்பு திறன் கொண்டது.

சவுதியின் தமாமில் உள்ள கிங் சவுத் பின் அப்துல்ஸீஸ் தெருவில் இந்த வாயில் நிறுவப்பட்டுள்ளது. இதுபற்றி அந்நாட்டின் முனிசிபாலிட்டி கூறுகையில் வரும் காலங்களில் இது போன்று அதிக வாயில்கள் மற்ற இடங்களிலும் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், முடிந்தவரை அதிகமான வாகனங்களை சுத்திகரிப்பு செய்வதை நோக்கமாக கொண்டு அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள தெருக்களை குறிவைத்து இந்த கேட் நிறுவப்படும் என்றும் கூறியுள்ளது.

சவூதியில் உள்ள கிழக்கு மாகாண பகுதியின் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொடர்பான சுத்திகரிப்பு திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையிலும் 23,500 க்கும் மேற்பட்ட இடங்களை 12,000 துப்புரவுத் தொழிலாளர்களின் உதவியுடன் சுத்திகரிப்பு செய்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் தற்பொழுது வரை 51,980 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 302 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த பாதிப்புகளில், கிழக்கு மாகாணத்தில் 9,831 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,114 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், 3,701 பேர் வைரஸின் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் மற்றும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருக்கும் மாகாணங்களில் கிழக்கு மாகாணம் மூன்றாம் இடத்தில் உள்ளது. முதலாவதாக மக்காவில் 21,353 பேரும், இரண்டாவதாக ரியாத்தில் 10,529 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!