அமீரக செய்திகள்

வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படும் புதிய விசா ஸ்க்ரீனிங் மையம் அபுதாபியில் திறப்பு..!!

அபுதாபியில் உள்ள முசாஃபாவின் தொழில்துறை பகுதியில் புதிதாக நோய் தடுப்பு மற்றும் பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அபுதாபி பொது சுகாதார மையத்தின் (ADPHC) இயக்குநர் ஜெனரல் மத்தர் சயீத் ரஷீத் அல் நுவைமி மற்றும் AHS இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமர் அல் ஜாப்ரி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது.

எளிதான மற்றும் விரைவான விசா மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஸ்க்ரீனிங் வசதிகளை உறுதி செய்வதற்கான அமீரகத்தின் மிகப்பெரிய சுகாதாரத் தளமான PureHealth மற்றும் அதன் துணை ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸ் (AHS) ஆகியவற்றின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மையம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் அபுதாபியின் மிகப்பெரிய விசா ஸ்கிரீனிங் சேவை வழங்குநரான AHS, அபுதாபி எமிரேட் முழுவதும் 16 நோய் தடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் மையங்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்டுள்ள விசா ஸ்கிரீனிங் மையம் வாரம் முழுவதும் குடியிருப்பாளர்களுக்கு விரைவான மருத்துவ பரிசோதனை சேவைகளை வழங்கும் என்று அல் நுவைமி கூறியுள்ளார்.

இது குறித்து டாக்டர் அல் ஜாப்ரி அவர்கள் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடிய விசா ஸ்கிரீனிங் சேவைகளை வழங்குவது முதன்மையான முன்னுரிமையாகும் என்பதால், மக்களின் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் மையங்களைத் தொடங்கி எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, அல் வஹ்தா மால் மற்றும் முஷ்ரிஃப் மால் ஆகிய இடங்களில் இரண்டு மையங்கள் திறக்கப்பட்ட நிலையில், தஷீல் (Tasheel) மற்றும் தவ்ஜீஹ் (Tawjeeh) ஆகியோருடன் இணைந்து விசா ஸ்கிரீனிங் மையங்களை அவர்களின் வளாகத்திற்குள் திறப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் முழு விசா செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் முடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் உத்தரவுகளுக்கு இணங்க, சமூகத்திற்கான மிக உயர்ந்த தரத்தில் பராமரிப்பு வழங்கப்படுவதாக PureHealth இன் தலைமை நிறுவன அதிகாரி ரஷீத் அல் குபைசி குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிதாக திறக்கப்பட்டுள்ள மையம், சுகாதார வசதிகளுக்கு தரமான, நம்பகமான மற்றும் வசதியான அணுகலை உறுதி செய்வதற்கு எங்கள் நடவடிக்கையின் உண்மையான பிரதிநிதித்துவம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், மொபைல் விசா ஸ்கிரீனிங் மூலமும் பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மொபைல் விசா ஸ்கிரீனிங் கிளினிக்கை முன்பதிவு செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்கள் [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது Seha Visa Screening ஆப் மூலம் தனிநபர்கள் அப்பாய்மெண்ட்டை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மையம் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!