அமீரக செய்திகள்

ஏஜெண்டை நம்பி அமீரகம் வந்து உணவு, வேலை இல்லாமல் தவிக்கும் இந்திய தொழிலாளர்கள்..!!

வெளிநாடுகளில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு அவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து வந்ததும் ஏமாற்றி விடும் சம்பவம் இந்தியாவில் தொடர்கதையாகவே இருக்கின்றது.

சமீபத்தில் ஏஜென்ட் மூலம் ஏமாற்றப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் ஒரே அபார்ட்மெண்டில் தங்கி வந்த கொடுமையும் அமீரகத்தில் நிகழ்ந்துள்ளது.

UAE: ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு ஒரே ஃப்ளாட்டில் தங்கிய 49 இந்தியர்களுக்கு வேலை அளித்த அமீரக நிறுவனங்கள்..!!

தற்பொழுது இந்தியாவில் இருந்து ப்ளூ காலர் என்று சொல்லப்படும் தொழிலாளர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தொழிலாளர்களிடம் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளும் இல்லாததால் புதிய வேலைகளைத் தேடவோ அல்லது இந்தியா திரும்பவோ முடியாத நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எட்டு தொழிலாளர்கள் இப்போது ஒரு தொழிலாளர் தங்குமிடத்தில் தங்கியுள்ளனர்.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அவர்களின் அவலநிலை குறித்து தெரிவிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு தேவையான உதவி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் ஒரு ஏஜெண்ட் தங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்ததாக கூறுகின்றனர். இதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ .30,000 (1,500 திர்ஹம்ஸ்) செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

கிரண் என்ற சமூக சேவகர் தான் முதலில் அவர்களை ஒரு தெருவில் கண்டுள்ளார். அவர்களின் நிலையை அறிந்த அவர் உடனடியாக தூதரக அதிகாரிகளிடம் உதவி கோரினார். இதையொட்டி, மற்றொரு சமூக சேவையாளரான ஹிதாயத் அதூரை அவர்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படிருக்கின்றது.

தொழிலாளர்களில் ஒருவரான ரைஜுல்லா தேவன் கூறுகையில், “நாங்கள் இங்கு உணவு, வேலை, பணம் என்று எதுவும் இல்லாமல் தவிக்கிறோம்.”

“ஹிதாயத் எங்களுக்கு தங்குமிடம் வழங்கி, எங்களுக்கு உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளையும் வழங்கி உதவி புரிந்தார்”என்று கூறியுள்ளார்.

இந்த தொழிலாளர்கள் கடந்த மார்ச் 5 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து சுமார் ஒரு மாதம் தங்குமிடத்தில் வசித்து வந்துள்ளனர்.

பின்னர், தொழிலாளர்கள் தங்களின் ஏஜென்ட் தங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறிய நிறுவனத்திற்கு தங்கள் பாஸ்போர்ட்களை கொடுக்கவில்லை என்பதை அறிந்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் பிரதிநிதி கூறுகையில், “நாங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்த தயாராக இருந்தோம், ஆனால் அவர்களின் பாஸ்போர்ட் எங்களுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

தொழிலாளர்களுக்கு உதவுகின்ற சமூக சேவையாளர்கள், சில நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

“சில நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்த தயாராக இருப்பதால் தொழிலாளர்களுக்கு அவர்களின் பாஸ்போர்ட் மிகவும் தேவைப்படுகிறது” என்று ஹிதாயத் கூறியுள்ளார்.

எனவே, வெளிநாடுகளில் வேலை தேடி வருபவர்கள் ஏஜெண்டை நம்பி ஏமாறாமல் வேலையின் உறுதித் தன்மையை சரிபார்த்த பின்னரே பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!