ADVERTISEMENT

அபுதாபி: போக்குவரத்து அபராதங்களில் வாகன ஓட்டிகளுக்கு 35% தள்ளுபடி..!! சலுகையை பெறுவது எப்படி..??

Published: 6 Nov 2022, 9:17 AM |
Updated: 6 Nov 2022, 9:19 AM |
Posted By: admin

அபுதாபியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு தங்கள் போக்குவரத்து அபராதங்களை முன்கூட்டியே செலுத்தி அபராதத்தில் இருந்து தள்ளுபடியைப் பெறுமாறு அபுதாபி காவல்துறை புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வாகன ஓட்டிகள் விதிமீறல் செய்த இரண்டு மாதங்களுக்குள் (60 நாட்கள்) போக்குவரத்து அபராதத்தைச் செலுத்தினால் 35 சதவீத தள்ளுபடியும், ஒரு வருடத்திற்குள் செலுத்தினால் 25 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது தாஹி அல் ஹுமைரி கூறுகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்த வாகன உரிமையாளர்களை ஊக்குவிப்பது, போக்குவரத்து அபராதங்களை முன்கூட்டியே செலுத்துவதன் நன்மைகள் மற்றும் காலதாமதத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், “இந்த முயற்சியானது போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தக்கூடிய வழிகளைப் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிக்கிறது,” என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அபுதாபி அரசாங்கத்தின் டிஜிட்டல் சேனலான “Tamm” மூலம் அபராதம் செலுத்துதல், காவல்துறையின் வாடிக்கையாளர் சேவை மற்றும் மகிழ்ச்சி மையங்கள் மூலம் நேரடியாக பணம் செலுத்துதல் மற்றும் அமீரகத்தில் உள்ள ஐந்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் வங்கிகளின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் போக்குவரத்து அபராதங்களுக்கு பணம் செலுத்துவது போன்ற பல வகைகளில் அபராதம் செலுத்தலாம் என  காவல்துறை கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி கமர்ஷியல் பேங்க் (ADCB), அபுதாபி இஸ்லாமிக் பேங்க் (ADIB), ஃபர்ஸ்ட் அபுதாபி பேங்க் (FAB), மஷ்ரெக் அல் இஸ்லாமி மற்றும் எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க் ஆகியவை இதில் அடங்கும் என்றும் வங்கிச் சேவையைப் பெற, ஓட்டுநர்கள் இந்த வங்கிகளில் ஏதேனும் ஒன்றினால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் வாகன ஓட்டிகள் தங்கள் அபராதங்களை தவணை முறையில் செலுத்தவும் விருப்பங்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல வாகன ஓட்டிகளுக்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் பட்சத்தில், தவணை முறை வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை ஆண்டு முழுவதும் தவணை முறையில் செலுத்துவதன் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை இந்தச் சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.