ADVERTISEMENT

அமீரகத்தில் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் புதிய வரி..!! தனிநபர் வருமானத்திற்கும் பொருந்துமா..??

Published: 10 Dec 2022, 6:09 PM |
Updated: 10 Dec 2022, 6:21 PM |
Posted By: admin

அரசாங்கங்களின் வருவாயைப் பன்முகப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் வணிகங்கள் மீது கார்ப்பரேட் வரி விதிக்கப்படுகிறது. அதே போன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 1, 2023 முதல் நிதியாண்டைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு வணிக லாபத்தின் மீதான கார்ப்பரேட் வரியை அறிமுகப்படுத்துவதாக அமீரகத்தின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் வரிவிதிப்பு குறித்த 2022 ஆம் ஆண்டின் பெடரல் ஆணை-சட்டம் எண்.47, ஐக்கிய அரபு அமீரகத்தின் உலகளாவிய பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவப்பட்ட கூட்டாண்மைகளின் கட்டமைப்பிற்குள் சர்வதேச நிதி அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு ஒருங்கிணைந்த வரி முறையை உருவாக்க உதவும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பதற்காகவும் பொருளாதாரத்தை மேலும் போட்டித்தன்மையடையச் செய்யவும் 375,000 திர்ஹம்ஸ் வரையிலான இலாபத்தை ஈட்டும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியானது விதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இதன் படி 375,000 திர்ஹம்களுக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 9% வரி விகிதம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

அத்துடன் கார்ப்பரேட் வரி என்பது வணிகத்தின் மொத்த விற்பனை மீது அல்ல, நிறுவனத்தால் திரட்டப்பட்ட லாபத்தின் மீது விதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, கார்ப்பரேட் வரியானது தனிநபர்களின் சம்பளம் அல்லது வேலைவாய்ப்பிலிருந்து வரும் வருமானத்திற்கு விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வங்கி வைப்பு அல்லது சேமிப்பு திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட வகையில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்படும் தனிப்பட்ட வருமானம் ஆகியவை இந்த கார்ப்பரேட் வரிக்கு உட்பட்டது அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான WAM தகவலின் படி, வேலை வாய்ப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகள், அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உரிமம் பெற்ற அல்லது மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட வணிகம் அல்லது வணிக நடவடிக்கைகளில் இருந்து இல்லாமல் தனிநபர்கள் சம்பாதித்த பிற வருமானத்தின் மீது கார்ப்பரேட் வரி விதிக்கப்படாது என்பது தெளிவாகியுள்ளது.

அத்துடன் கார்ப்பரேட் வரி பொருந்தும் தேதியானது ஒவ்வொரு வணிக நிறுவனத்திற்கும் அவர்களின் நிதியாண்டின் அடிப்படையில் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு வணிகமானது ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான நிதியாண்டைப் பின்பற்றினால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரக கார்ப்பரேட் வரி அவர்களுக்குப் பொருந்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டத்தின்படி, ஐக்கிய அரபு அமீரக கார்ப்பரேட் வரிச் சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃப்ரீ ஸோன் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய அளவிலான நிலையான வரிக்கு உட்பட்ட இயற்கை வளம் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வணிகங்களுக்கும் இந்த கார்ப்பரேட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது. அத்துடன் அரசு நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் பொது நல நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரி பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.