அமீரக செய்திகள்

UAE: இன்று முதல் அமலுக்கு வரும் மதிய ஓய்வு இடைவேளை..!! எந்த தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது..??

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை திறந்தவெளி மற்றும் கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்களுக்கு மதிய ஓய்வு இடைவேளையை தொடங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அதன்படி இன்று முதல் தொழிலாளர்களுக்கு மதிய ஓய்வு இடைவேளை அளிக்கப்படவுள்ளது. இந்த விதியின் கீழ், நேரடியாக சூரிய ஒளி படும்படி வேலை செய்வது மதியம் 12:30-3 மணி வரை அனுமதிக்கப்படாது. இந்த முடிவானது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கும், கோடை மாதங்களில் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்ப அமைக்கப்பட்டதாகும்.

நாட்டில் தொடர்ந்து 18வது ஆண்டாக இந்த மதிய இடைவேளை அமல்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை குறிப்பாக மதிய நேரங்களில் மிக அதிகமாக இருக்கும் உச்சமாக இருக்கும். வெப்பநிலை சில சமயங்களில் 50 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அளிக்கப்படும் மதிய இடைவெளியானது பல ஆண்டுகளாக தொழிலாளர்களிடையே வெயில் சோர்வு மற்றும் வெயில் காலங்களில் பக்கவாதத்திற்கு ஆளாகும் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க குறைவுக்கு வழிவகுக்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது.

விலக்குகள்

நேரடியாக சூரியனுக்குக் கீழே வேலை செய்ய தொழிலாளர்களுக்கு மதிய நேரங்களில் தடை அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் சில வேலைகளுக்கு அந்த வேலை தடையின்றி தொடர வேண்டும் என்பதற்காக இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை

  • அஸ்ஃபால்ட் கலவையை பரப்புவது அல்லது கான்கிரீட் ஊற்றுவது போன்ற திட்டப்பணிகள்.
  • ஆபத்தைத் தடுக்க மேற்கொள்ளப்படும் வேலை: சேதங்கள் அல்லது செயலிழப்புகளை சரிசெய்தல்
  • தற்செயலான அவசர இழப்புகளைத் தடுத்தல்: தண்ணீர் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் அல்லது மின் இணைப்புகளில் உள்ள தடைகளை சரி செய்தல்; அல்லது பொதுச் சாலைகள் மற்றும் எரிவாயு அல்லது எண்ணெய் குழாய்களில் ஏற்படும் இடையூறுகளை சரிசெய்தல்
  • மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளை துண்டித்தல் 

இது போன்ற தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்தி வைக்க முடியாத பணிகளில் தொழிலாளர்கள் பணிபுரிந்தால்  தடை செய்யப்பட்டுள்ள நேரங்களிலும் அவர்கள் பணிபுரியலாம். இருப்பினும் மேலே விவரிக்கப்பட்ட நிகழ்வுகளில், முதலாளிகள் குளிர்ந்த குடிநீர், உப்பு மற்றும் எலுமிச்சை கலந்த நீர் போன்ற தாகம் தீர்க்கும் பொருட்களை தொழிலாளர்களுக்கு அவ்வப்போது வழங்க வேண்டும்.

கூடுதலாக, நிறுவனங்கள் தொழிலாளிகள் வேலை செய்யும் இடத்தில் முதலுதவிக்கான ஏற்பாடுகளை வைத்திருக்க வேண்டும். அத்துடன் நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொழிலாளர்களுக்கு பொருத்தமான தொழில்துறை குளிரூட்டும் வசதிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலையில்லா நேரத்தில் ஓய்வெடுக்க நிழல் அளிக்கும் இடங்கள் போன்றவை உடனடியாகக் கிடைக்கும் வண்ணம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அபராதம்

மதிய இடைவேளையை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் என அபராதம் விதிக்கப்படும் என்றும் மதிய இடைவேளையை மீறி பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால், அதிகபட்சமாக 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதியனை மீறும் நிறுவனங்கள் மீது திங்கள் முதல் சனி வரை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, அமைச்சகத்தின் அழைப்பு மைய எண்ணான 600590000 என்ற எண்ணிற்கு அழைத்து தடை மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் அல்லது அமைச்சகத்தின் அப்ளிகேஷனில் சென்று தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!