அமீரக செய்திகள்

என்ஜின் வேகத்தை அதிகரிக்க பவர் பூஸ்டர்களை மாற்றுபவர்களுக்கு கடும் தண்டனை!! துபாய் காவல்துறை எச்சரிக்கை…!!

துபாயில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வாகனங்களின் என்ஜின் வேகத்தை அதிகரிக்க பவர் பூஸ்டர்களை மாற்றியமைத்ததுடன் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி போக்குவரத்து விதிகளை மீறிய 1,195 வாகனங்களை துபாய் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும், அதிக இரைச்சல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்ட 4,533 வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதமும் விதித்துள்ளனர்.

துபாய் காவல்துறை தலைமையகத்தில் (Dubai Police Headquarters) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய போக்குவரத்துப் பொதுத் துறையின் செயல் இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் ஜுமா சலேம் பின் சுவைடன் அவர்கள், 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பிரச்சாரத்தில், ​​போக்குவரத்து அதிகாரிகள், 1,079 வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், வாகனத்தின் எஞ்சின் அல்லது பேஸ் (chassis) போன்றவற்றை முறையான லைசன்ஸ் இல்லாமல் மாற்றியமைத்துள்ள 2,361 பேருக்கு அபராதம் விதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற குற்றத்திற்கு தண்டனையாக 1,000 திர்ஹம் அபராதமும்,12 ட்ராபிக் பாயிண்டுகளும் விதிக்கப்படுவதுடன் வாகனம் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். ஆகையால், வாகன என்ஜின்களை கையாளும் மற்றும் மாற்றியமைக்கும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க துபாய் காவல்துறை தொடர்ச்சியான ஆய்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், 116 வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதிக இரைச்சலை ஏற்படுத்தியதற்காக 2,172 வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினால் 2,000 திர்ஹம்ஸ் அபராதமும் 12  ட்ராபிக் பாயிண்டுகளும் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவையனைத்தும் பாதுகாப்பு, நிலைத்தன்மை, ஆறுதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கும் நமது மக்களின் அமைதியை அவை பாதிக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சாலைப் பயனாளர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளை பாதிக்ககூடிய எதிர்மறையான நடத்தைகளைத் தடுப்பதில் துபாய் காவல்துறை ரோந்துகள் கவனம் செலுத்துவதாகவும், எமிரேட் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள்:

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 250 வாகனங்களைக் கைப்பற்றியுள்ள துபாய் காவல்துறை, என்ஜினில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக 327 வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. அதுபோல, அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக 19 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பெற்றோரின் பங்களிப்பு:

போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் சமூகத்திற்கு பாதுகாப்பை வழங்குவதில் காவல்துறையின் முயற்சிகளுடன் குடும்பத்தின் பங்கு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே, பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளைப் பின்தொடரவும், இந்த நடத்தையின் தீவிரத்தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தாக்கம் குறித்து அவர்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யவும்  பிரிகேடியர் ஜெனரல் சுவைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கூறிய விதிமீறல் நடத்தைகள் அனைத்தும் சிவப்பு விளக்கைத் தவிர்த்தல், நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறுதல், தெளிவாகத் தெரியாமல் சாலையில் நுழைதல், தனது உயிருக்கோ மற்றவர்களின் உயிருக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டுதல் போன்ற ஆபத்தான விதிமீறல்களில் அடங்கும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!