அமீரக செய்திகள்

Covid-19: துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமாவில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலேயே இருப்பதால் அமீரக அதிகாரிகள் வணிக மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட நெறிமுறைகளையும் விதிகளையும் அறிவித்துள்ளனர். அமீரகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பொறுத்து, சமூகக் கூட்டங்கள், உணவகங்கள் அல்லது திரையரங்குகளுக்கென பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த புதிய விதிமுறைகளுடன் வெளியில் செல்லும் போது பொதுமக்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிவது மற்றும் குறைந்தது இரண்டு மீட்டர் சமூக தூரத்தை பராமரிப்பது போன்ற அடிப்படை COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்போதும் கடைபிடிக்குமாறும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளின் விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துபாய்

புதிய பயண நெறிமுறைகள்

துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு ஜனவரி 31 முதல் பயண நெறிமுறைகளுக்கான புதுப்பிப்புகளை அறிவித்தது.

  • அதன்படி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் துபாய்க்கு வந்தவுடன் கொரோனாவிற்கான PCR சோதனை செய்ய வேண்டும்.
  • ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், GCC குடிமக்கள் மற்றும் துபாய்க்கு பயணிக்கும் சுற்றுலாவாசிகள், எந்த நாட்டிலிருந்து வந்தாலும் பயணத்திற்கு முந்தைய PCR சோதனை செய்ய வேண்டும். குறிப்பிட்ட சில நாடுகளின் கொரோனா நிலைமை அடிப்படையில், துபாய்க்கு வந்தவுடன் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பயணத்திற்கு முந்தைய PCR சோதனை எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

PCR சோதனைகளின் செல்லுபடியாகும் காலம் 96 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பயணத்திட்டத்தைப் பொறுத்து, புறப்பட வேண்டிய நேரத்திற்கு நேரத்தின் மூன்று நாட்களுக்குள் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

துபாயிலிருந்து புறப்படும் பயணிகளுக்கான நெறிமுறைகள்

துபாயிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய நாட்டின் நெறிமுறைகளை பொறுத்து PCR அல்லது ரேபிட் ஆன்டிஜென் சோதனை வசதிகள் துபாய் விமான நிலையத்தில் கிடைக்கும்.

உணவகங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை குழு, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் உள்ள மேஜைகளுக்கு இடையிலான தூரத்தை இரண்டு மீட்டரிலிருந்து மூன்று மீட்டராக உயர்த்துவதற்கான முடிவை அறிவித்தது.

மேலும், ஒரு மேஜையில் உட்கார அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உணவகங்களில் 10 இல் இருந்து 7 ஆகவும், ஷிஷா, கஃபேக்கள் உட்பட கபேக்களில் 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திருமணங்கள், சமூகக் கூட்டங்கள்

திருமணங்கள், தனியார் விருந்து நிகழ்வுகள், சமூக கூட்டங்கள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 10 பேருக்கே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்நிகவுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியானது ஜனவரி 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஜிம்களுக்கான புதிய விதிகள்

துபாய் பொருளாதார மற்றும் துபாய் விளையாட்டு கவுன்சிலானது விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இடையிலான சமூக இடைவெளியை இரண்டு மீட்டரிலிருந்து மூன்று மீட்டராக அதிகரிககுமாறு உடற்பயிற்சி மையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் அனைத்தும் கடந்த ஜனவரி மாத 22 ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை

ஜனவரி 21 ம் தேதி, துபாய் ஊடக அலுவலகம் அனைத்து துபாய் சுகாதார ஆணையத்தின் (DHA) உரிமம் பெற்ற மருத்துவமனைகள் மற்றும் நாள் அறுவை சிகிச்சை மையங்கள் பிப்ரவரி 19 வரை மிக முக்கியமான அறுவை சிகிச்சைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த முடிவு மிகவும் முக்கியமான சுகாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு அனுமதிகள் நிறுத்தி வைப்பு

துபாயில் சில பொழுதுபோக்கு நிறுவனங்கள் கொரோனாவிற்கான விதிகளை மீறி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டமையால், உணவகங்கள் மற்றும் பீச் கிளப்புகளில் நடைபெறும் நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் டி.ஜேக்களின் (DJ) பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.

பூங்காக்களின் விளையாட்டு மைதானங்கள் மூடல்

பிப்ரவரி 10 ம் தேதி, துபாய் முனிசிபாலிடி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பூங்காக்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் தினமும் இரவு 8 மணிக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கிய பூங்காக்கள் மற்றும் லேக் கார்டனில் உள்ள விளையாட்டு மைதானங்கள், பூங்காவின் இறுதி நேரத்திற்கு ஏற்ப மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையம் செல்வதற்கு PCR டெஸ்ட் ரிசல்ட் கட்டாயம்

துபாயில் இன்று (பிப்ரவரி 11) துபாய் காவல்துறையில் உள்ள நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை குழு, துபாய் காவல்நிலையக் கட்டிடத்திற்குள் நுழையும் எவரும் 48 மணிநேரங்களுக்கு பெறப்பட்ட செல்லுபடியாகும் எதிர்மறை PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. எனினும், கொரோனாவிற்கான தடுப்பூசியின் இரண்டு டோசினையும் எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்தத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி

அபுதாபி அரசானது பிப்ரவரி 7 முதல், வணிக, பொருளாதார மற்றும் சுற்றுலா நடவடிகைகள் பின்வரும் திறனிலேயே இயங்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

• ஷாப்பிங் மால்கள் – 40 சதவீதம்

  • ஜிம்கள், தனியார் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள் – 50 சதவீதம்

• உணவகங்கள், காபி கடைகள், ஹோட்டல்கள், பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் – 60 சதவீதம்

• டாக்சிகள் – 45 சதவீதம்

  • பேருந்துகள் – 75 சதவீதம்

திரை அரங்குகள் மூடல், பார்ட்டிகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழுவும் அனைத்து திரையரங்குகளையும் மூடுமாறும் பார்ட்டிகள் மற்றும் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு தடை விதித்தும் அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், திருமண விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்கு 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் இறுதி சடங்குகளுக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா

கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக ஷார்ஜா அரசும் பல்வேறு பிப்ரவரி 7 அன்று மேம்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்தது.

சமூக நிகழ்வுகள்

திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு, அதிகபட்சமாக 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் அந்த இடத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் இடையே நான்கு மீட்டர் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைவரும் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள்

உணவகங்களில் உள்ள ஒவ்வொரு மேசைகளிலும் அதன் திறனில் பாதியளவு எண்ணிக்கையிலேயே நபர்கள் உக்கார அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு மேசைக்கு பத்து பேர் அமரலாம் என்று இருந்தால், தற்பொழுது ஐந்து பேருக்கு மேல் அமர அனுமதிக்கக்கூடாது, மேலும் ஒவ்வொரு மேஜைக்கும் இடையில் இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்.

மால்கள், சினிமாக்கள் மற்றும் உணவகங்கள்

பிப்ரவரி 9 அன்று, ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டு துறை (SED) வணிக நடவடிக்கைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அவை

  •  சினிமாக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றில் அதிகபட்சம் 50 சதவீத திறனில் மட்டுமே இயங்க முடியும், மேலும் பார்வையாளர்களிடையே இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்
  • ஷாப்பிங் சென்டர்களும் மால்களும் பார்வையாளர்களிடையே இரண்டு மீட்டர் தூரம் கடைபிடிப்பதோடு அதிகபட்சமாக 60 சதவீத அளவில் மட்டுமே செயல்பட வேண்டும்.
  • உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் ஒவ்வொரு மேஜைக்கும் இடையில் இரண்டு மீட்டர் தூரத்தை கடைபிடிப்பதோடு, குடும்ப உறுப்பினர்களை தவிர ஒரு மேசையில் நான்கு நபர்களுக்கு மட்டுமே உக்கார அனுமதி வழங்கப்பட வேண்டும்.
  • ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் 50 சதவீத திறனில் மட்டுமே இயங்க வேண்டும்.

ஆன்லைன் கல்வி முறை

பிப்ரவரி 11 ஆம் தேதி, அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் பிப்ரவரி இறுதி வரை ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது.

PCR சோதனை

ஷார்ஜா காவல்துறை கட்டிடங்களுக்குள் நுழைபவர்கள் 48 மணிநேரங்களுக்கு செல்லுபடியாகும் எதிர்மறை பி.சி.ஆர் சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜ்மான்

அஜ்மான் அரசின் நெருக்கடி, பேரழிவு மற்றும் அவசர குழு இன்று (பிப்ரவரி 11) பின்வரும் தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

  • இசை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவை நடைபெறுவதற்கு தடை.
  • திருமண விழாக்கள் மற்றும் பிற குடும்ப நிகழ்வுகளில் அதிகபட்சம் 10 பேருக்கு மட்டுமே அனுமதி மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி
  • சினிமாக்கள், உடற்பயிற்சி மையங்கள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் ஹோட்டல் கடற்கரைகள் 50 சதவீதம் திறனில் இயங்க வேண்டும்.
  • முன்னதாக, அஜ்மானின் பொருளாதார மேம்பாட்டுத் துறை பிப்ரவரி 8 முதல் திருத்தப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்தது. அதன்படி, கஃபேக்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் உணவகங்கள் ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும் இந்த இடங்களில் வாடிக்கையாளர் 50 சதவீத எண்ணிக்கையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமா

கடந்த பிப்ரவரி 10 அன்று, ராஸ் அல் கைமா அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவு குழு பொது இடங்களில் பின்வரும் கட்டுப்பாடுகளை அறிவித்தது:

  • பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் 70 சதவீத திறனிலேயே இயங்க வேண்டும்
  • ஷாப்பிங் மால்கள் 60 சதவீத திறனில் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • பொது போக்குவரத்து, சினிமாக்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் இடங்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் ஜிம்கள், அத்துடன் ஹோட்டல்களில் உள்ள தனியார் கடற்கரைகள் போன்றவை 50 சதவீத திறனிலேயே இயங்க வேண்டும்
  • திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 மற்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!